மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு.
திருச்சி: தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இடஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், மெட்ரிக்., பள்ளிகள் ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், சுயநிதி மெட்ரிக்., பள்ளிகளில், நுழைவு நிலை கல்வியில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்.
இதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டிற்காகன மாணவர் சேர்க்கைக்கு, திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்., பள்ளிகளில் கடந்த, 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பித்தவர்களின் பட்டியல், 11ம் தேதி வெளியிடப்படும்.
இதில் தகுதியுடைய மாணவர்கள், 14ம் தேதி பெற்றோர், மக்கள் மத்தியில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் தேர்வு பட்டியல் அன்று மதியம், 2 மணிக்கு, பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை தகுதியுடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் கே.கே.நகர் ஆல்பா மெட்ரிக்., பள்ளியில், 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்க மறுப்பதாக, ஏர்போர்ட் காமராஜர் நகரைச் சேர்ந்த சுதா என்பவர் கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் புகார் மனு அளித்தார்.
இதில் கலெக்டர் தலையிட்டதால், அந்த பள்ளியில் உடனடியாக சுதாவுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது, இட ஒதுக்கீடு குறித்து, திருச்சி மாவட்ட கல்வி அதிகாரிகள் முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment