கல்லூரி மாற்றத்துக்கு தடை செய்யும் அரசு ஆணை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு.
பட்ட மேற்படிப்பின்போது ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு இடம் மாறுவதைத் தடுக்கும் தமிழக அரசின் ஆணையை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கார்த்திகா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2012-13-ம் கல்வி ஆண்டில் எம்.பி.ஏ., பிரிவில் சேர்ந்தேன். சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு நான் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கல்லூரி மாற்றத்துக்கு இரண்டு கல்லூரிகளும் சம்மதம் தெரிவித்தன.
ஆனால், உயர் கல்வித் துறையில் உள்ள அரசாணைப்படி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற பட்ட மேற்படிப்பு பயிலும்போது வேறு கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய முடியாது. ஓர் ஆண்டு முடிந்த பிறகே மாற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அரசுத் தரப்பில் எம்.முத்துக்குமார் ஆஜராகி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த துணை வேந்தர்கள் கூட்டத்தின்போது, பட்ட மேற்படிப்பு இரண்டு ஆண்டுகள் மட்டும்தான்.
அதனால், ஓராண்டு முடிந்த பிறகே, வேறு கல்லூரிக்கு மாற முடியும் என சட்டம் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மற்றொரு கல்வி நிறுவனத்துக்கு மாறுவதைத் தடை செய்யும் அரசு ஆணைக்கு சரியான காரணம் இல்லை.
மனுதாரர் மாற இருக்கும் கல்வி நிறுவனம் இரண்டும் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ்தான் உள்ளது. அதனால் அரசின் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் சரியானதல்ல. அதனால், மனுதாரரின் மனு ஏற்கப்பட்டு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மனுதாரர் கல்லூரி மாற்றத்துக்கான புதிய விண்ணப்பத்தை உயர் கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். உயர் கல்வித்துறை மனுவை பெற்ற இரண்டு வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment