"ஆதார்' எண்ணை தபால் நிலையங்களில் பதிவு செய்து பயனடையலாம் அரசு திட்டங்களை விரைவாகப் பெற வழிவகை.
தமிழகத்தில் ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் அந்த எண்ணைப் பதிவு செய்து கொள்வதன் மூலம், மத்திய அரசின் திட்டங்களை எளிதில் பெற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டக் குழுவின் கீழ் ஆதார் எனப்படும் 12 எண்கள் கொண்ட ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத் திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாள எண் ஒதுக்கப்படும். விண்ணப்பிப்பவரின் கைரேகை "பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட்டு அது கணினி மயமாக்கப்படும்.
அதோடு விண்ணப்பிப்பவரின் முழு விவரங்களும் அதனுடன் பதிவு செய்யப்படும். அந்த கைரேகையை வைத்தே ஒருவரின் அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு அது வழங்கப்படுகிறது.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்த அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம். குறிப்பாக வங்கிக் கணக்குகள் தொடங்குவது போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம்.
இது குறித்து கோவை கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குருநாதன் கூறுகையில், ஆதார் அட்டை வைத்துள்ள பொதுமக்கள் தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், அவர்களுக்கான ஆதார் எண்ணை சேமிப்புக் கணக்குடன் பதிவு செய்து கொள்ள தற்போது மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு பதிவு செய்து கொள்வோர் மத்திய அரசின் திட்டங்கள், சலுகைகளை எளிதாகவும், விரைவாகவும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு இல்லாதவர்கள், எளிய நடைமுறையில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி எண்ணைப் பதிவு செய்து பயனடையலாம் என்றார்.
No comments:
Post a Comment