தவணையல்ல, உரிமை.


பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மேலாக வசூலிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு பள்ளி மாணவருக்கான கல்விக் கட்டணத்தை அந்தந்த மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்தினால் போதுமானது என்கிறது தீர்ப்பு.

தங்கள் குழந்தைகளுக்கான மூன்று மாதக் கல்விக் கட்டணத்தை முன்னதாகவே பள்ளியில் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துவதாக தில்லி வாழ் பெற்றோர் சிலர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்விக் கட்டணத்தை மாதம்தோறும் செலுத்துவதற்கு கல்வித் துறையின் விதிமுறைகள் அனுமதித்தாலும், பள்ளி நிர்வாகங்கள் ஒப்புக்கொள்வதில்லை என்பதால்தான் நீதிமன்றத்தின் படியேறி இந்த நியாயத்தைப் பெற்றிருக்கிறார்கள் அந்தப் பெற்றோர்கள். வழக்கம்போல, "எங்களால் பள்ளிக்கூடத்தை நடத்தவே முடியாது, சம்பளம் போட முடியாது, இது எங்களுக்கு மிகவும் சிக்கலான நடைமுறை' என்று பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பங்குக்குக் கருத்துத் தெரிவித்து விட்டன.
இந்தியா முழுவதிலும் இதே சிக்கல் நிலவுகிறது. சில பள்ளிகள், ஒரு கல்வி ஆண்டுக்கான கட்டணம் முழுவதையும் முன்னதாகவே வசூலிக்கின்றன. சில பள்ளிகள் இரண்டு தவணைகளில் வசூலிக்கின்றன. சில பள்ளிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கின்றன.
தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து முதலிலேயே, கல்விக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் "பிராய்லர்' பள்ளிகளும்கூட இருக்கின்றன. அதாவது, கோழிப்பண்ணை ஒப்பந்தத் தொழிலில், கோழிக்குஞ்சு, அதற்கான தீவனம், வளர்ப்புத்தொகையை கொடுத்துவிட்டால் போதும், 65 நாளில் 1.5 முதல் 2 கிலோ எடைக்கு கறிக்கோழி உருவாக்கித் தந்துவிடுவார்கள். அதுபோல மாணவர்களைச் சேர்த்துவிட்டு பணத்தையும் முன்னதாகவே கொடுத்துவிட்டால் போதும், பிளஸ் டூ-வில் 195 "கட்-ஆஃப்' மதிப்பெண் உறுதி செய்து தருவார்கள். இத்தகைய "பிராய்லர்' பள்ளிகளில், பிளஸ் 1-இல் சேர்க்கும்போதே பிளஸ்-டூ-வுக்கும் சேர்த்து, ஹாஸ்டல் கட்டணத்தையும் உள்ளடக்கியதாக ரூ 3 லட்சம் வரை செலுத்திவிட வேண்டும்.
கல்விக் கட்டணத்தை நான்கு தவணைகளில், இரண்டு தவணைகளில் அல்லது ஒரே தவணையில் வசூலிக்கும் இத்தகைய பள்ளி நிர்வாகங்கள், ஒரு மாணவன் மருத்துவக் காரணங்களுக்காகப் பள்ளியை விட்டு விலக நேர்ந்தாலோ அல்லது வேறு பள்ளிக்கு மாறுவதாக இருந்தாலோ கட்டிய பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில்லை.
கல்விக் கட்டணத்தை மட்டுமல்ல, பேருந்துக் கட்டணத்தையும்கூட இதுபோல முன்னதாகவே வசூலித்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பான கமிட்டி கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு பள்ளிக்கான ஆண்டு கட்டணத்தை நிர்ணயிக்கும் இந்த கமிட்டி, இக்கட்டணத்தை மாதம்தோறும் செலுத்த விரும்பும் பெற்றோர்களுக்காகவும், கல்விக் கட்டணத்தை வகைப்படுத்தினால் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு மிகவும் உதவியாக அமையும். மாதம்தோறும் வாடகை செலுத்துவதைப்போல, ஒவ்வொரு மாதமும் குழந்தைகளின் கல்விக்காக ஒரு தொகையை பெற்றோர் ஒதுக்க முடியும்.
பள்ளிகளைக் காட்டிலும், தனியார் கல்லூரிகளுக்கு இவ்வாறு மாதம்தோறும் கல்விக் கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் அவசியமானது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை (இரு பருவங்களுக்கானது) ஒரே தவணையாக ரூ.72,000 வசூலிக்கிறார்கள். நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இது பெரியதொகை. இது வங்கிக் கடனாகவே இருந்தாலும்கூட, இந்தத் தொகை வழங்கப்பட்ட நாள் முதலாக 8% வட்டி மாதம்தோறும் கணக்கில் கூடிக் கொண்டே போகிறது. இதையே பத்து மாதங்களுக்குப் பிரித்து, மாதம் ரூ.7,200-யை வங்கிகளே நேரடியாகச் செலுத்த வகை செய்தால், மாணவர்களுக்குத் தேவையில்லாமல், கடனுக்கு வட்டி கட்டும் அவசியம் ஏற்படாது.
இதைவிட மிகவும் மோசம் மருத்துவக் கல்வி. ஓராண்டுக்கு ரூ.2.5 லட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கின்றன தனியார் மருத்துவக் கல்லூரிகள்.
இந்தப் பணத்தை வசூலிக்கும் நிறுவனங்கள் இவற்றை வங்கிக் கணக்கில் சேமித்து வைத்து மாதம்தோறும் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்குப் பிரித்து அளிப்பதாக நினைக்கத் தோன்றினாலும், இந்தத் தொகை பெருமளவு வேறு தொழில்களுக்காகத் திருப்பி விடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே தவணையில் பணத்தை வசூலிக்கும்போதுதான் கருப்புப் பணத்தை "ஒரே தவணையில்' திருப்பிவிட முடியும்.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி எல்லாவற்றிலும், கல்விக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் ஆகியவற்றை மாதம்தோறும் செலுத்த வகை செய்ய வேண்டும்.
ஒரு கல்லூரியின் பெருமைக்குத் துணை சேர்க்கும் வளாக நேர்காணலுக்கு கல்லூரிகள் முதலிலேயே கட்டணம் வசூலிக்கக் கூடாது. "அப்பாயின்ட்மென்ட் லெட்டர்' கிடைத்தால் மட்டுமே, நேர்காணல் கட்டணம் வசூலிக்க வேண்டும். வெறும் "ஆபர் லெட்டர்' கண்துடைப்புகளுக்கெல்லாம் வளாக நேர்காணல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தனியார் துறையிடம் கல்வியைத் தாரை வார்த்து விட்டதாலேயே, அரசு தனது கடமையைக் கைகழுவிவிட வேண்டும் என்பதில்லை. எந்த ஒரு அரசையும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவது நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள்தானே தவிர, கோடிகளில் புரளும் தனியார் கல்வி நிறுவனங்கள் அல்ல. அதனால், அப்பாவிப் பெற்றோர்களின் சார்பில் கல்விக் கட்டணத்தை நெறிப்படுத்தவும், மாதத் தவணையில் வசூலிக்கச் சொல்லவும் அரசுக்கு உரிமை உண்டு. அதற்கு அடிபணிய வேண்டியது தனியார் கல்வி நிறுவனங்களின் கடமை.

No comments:

Post a Comment