வேலை வாங்கித்தருவதாக கூறி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் பணம் பறிக்க முயற்சி 2 பேர் கைது.

சென்னை
வேலை வாங்கித்தருவதாக கூறி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி

போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீஸ் அனுமதி பெறாமல் கூட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் அய்யப்பன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு மண்டபத்தில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே 12–ம் வகுப்பு முடித்து விட்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் என்பதும், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருப்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து பல ஆண்டுகள் ஆகியும் அரசு வேலை கிடைக்காதவர்கள், அரசு வேலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தங்களின் சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் இங்கு வருமாறு பாதிக்கப்பட்டோர் ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் என்பவர் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்ததால் இங்கு வந்ததும் தெரியவந்தது.
பின்னர் மண்டபத்தில் கூடி இருந்தவர்களிடம் அவர்களின் பெயர், முகவரியை பெற்றுக்கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
2 பேர் கைது
இதையடுத்து அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக கூறி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்(வயது 23), விஸ்வநாதன்(33) ஆகிய 2 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் வேலை வாங்கித்தருவதாக கூறி இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக சுரேஷ் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment