திட்டமிட்டபடி கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தலாம் : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு.


சென்னை: தமிழகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை கடந்த வாரம் நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘கூட்டுறவு சங்கங்களில் சட்டவிரோதமாக அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது செல்லாது. எனவே தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, ‘‘கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த அரசு சட்டதிருத்தம் கொண்டு வந்தது சரியானதுதான். இதற்கு தடை விதிக்க கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றனர். இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு விவரம்: 25 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்தது செல்லும். உறுப்பினர்களை சேர்த்ததும் சரியானது தான். தேர்தல் எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திட்டமிட்டபடி தமிழக அரசு தேர்தல் நடத்தலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment