பள்ளி கல்வி சான்றிதழுக்கு உண்மை சான்றளிக்க தாமதம் செய்வதாக புகார்.
மருத்துவம், பொறியியல், செவிலியர், கல்வியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மை சான்றளிப்புக்கு, பள்ளிக் கல்வி தேர்வுத் துறையில் அலைக்கழிப்பு செய்வதால், இந்த மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில், ஏற்கனவே உயர்கல்விக்கு சென்ற சில மாணவர்கள் போலியான பள்ளிக் கல்வி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்தாகக் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடுகள் தொடராமல் தடுக்கும் வகையில், 1993-ம் ஆண்டு முதல் உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியரின் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகளின் நகல்களை சென்னையிலுள்ள பள்ளிக் கல்வி தேர்வுத் துறைக்கு அனுப்பி, இணை இயக்குநர் நிலையிலான அதிகாரி மூலம் அந்தச் சான்றுகள் உண்மையானவைதான் என சான்றளிப்பு பெற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில், 10-ம் வகுப்பு முடித்தவுடன் நேரடியாக ஆசிரியர் பயிற்சி, பல் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றுக்கு செல்லும் மாணவ, மாணவியரின் 10-ம் வகுப்பு அரசுத் தேர்வு மதிப்பெண் சான்றுகளின் நகல்களும், மருத்துவம், பொறியியல், செவிலியர், கல்வியியல் உள்ளிட்ட மற்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் பிளஸ் 2 அரசுத் தேர்வு மதிப்பெண் சான்றுகளின் நகல்கள், அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர்கள் மூலம் பள்ளிக்கல்வி தேர்வுத் துறைக்கு உண்மை சான்றளிப்புக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கின்றனர். இந்தச் சான்று பெற்று விண்ணப்பித்தால் மட்டுமே அந்த கல்வியாண்டில் மாணவர்கள் தேர்வு எழுத பல்கலைக்கழகங்களால் அனுமதிக்கப்படுவர்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் கல்லூரி முதல்வர்கள் மூலம் இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றை சரிபார்த்து விரைவில் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக தேர்வுத் துறையில் 5 முதல் 6 மாவட்டங்களுக்கு ஓர் அலுவலகமாக அமைத்து அரசு பள்ளிக்கல்வித் துறை மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சான்றளிப்புக்கு பெரும்பாலான பிரிவு அலுவலகங்களில் கல்லூரிகளின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக, பல கல்லூரி முதல்வர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் கல்லூரி முதல்வர்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைத்து விட்டு பல மாதங்கள் காத்திருந்தாலும், மாணவ, மாணவியரின் மதிப்பெண் சான்றுக்கான உண்மைச் சான்று கல்லூரிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படுவதில்லை. அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தரப்பில் சென்னையிலுள்ள தேர்வுத் துறை இணை இயக்குநர் அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகங்களிலுள்ள கண்காணிப்பாளர், ஊழியர்களுக்கு "கவனிப்பு' செய்தால் மட்டுமே உண்மை சான்று பெறும் நிலை இருப்பதாக, சில செவிலியர் கல்லூரி முதல்வர்கள் வேதனை தெரிவித்தனர்.
மாணவ, மாணவியருக்கு தேர்வுத் துறை வழங்கிய மதிப்பெண் சான்றுக்கு, அந்த துறையில் மீண்டும் உண்மை சான்றளிப்புக்கு ஓராண்டு வரை அலைக்கழிப்பு செய்யும் நிலை இருப்பதாகவும், இதனால், இந்த சான்று பெற்று சமர்ப்பிக்காத மாணவ, மாணவியரைத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என பல்கலைக்கழகம் எச்சரிக்கை அறிவிப்பாணைகளை கல்லூரிக்கு அனுப்பும் நிலையும் ஏற்பட்டு வருவதாக, அவர்கள் கூறினர்.
பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தேர்வுத் துறை இயக்குநர் ஆகியோர் இப் பிரச்னையில் தனிக் கவனம் செலுத்தி, தேர்வுத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும் இப் பிரச்னை தொடராமல் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கின்றனர் கல்லூரி முதல்வர்கள்.
No comments:
Post a Comment