ஒரேயொரு மாணவிக்கு இரு ஆசிரியர்கள்: அரசு பள்ளி மூடல் எப்போது?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, டி.கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்காக, தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில், 2010-11ல், 11 குழந்தைகளும், 2011-12ல், ஏழு குழந்தைகளும் பயின்றனர். தற்போது ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார்.டி.கிளியூர் கிராம மக்கள் கூறுகையில், "அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், சரிவர வருவதில்லை. கல்வித்தரம் மற்றும் குழந்தைகள் மீதான அக்கறை கருதி, வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்த்துள்ளோம்' என்றனர்.டி.கிளியூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா கூறியதாவது:கிராம மக்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகிறோம். ஒரு மாணவி மட்டும், இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.அவளுக்கு நானும், மற்றொரு ஆசிரியரும் நிறைவாக பாடம் நடத்தி வருகிறோம். ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர், மாணவிக்கு சமையல் செய்து கொடுக்கின்றனர்,இவ்வாறு அவர் கூறினார்.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்காக விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் பல நடத்தியும், வீடு, வீடாக பிரசாரம் செய்தும், இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை.பள்ளியை மூடவும், ஆசிரியர்களை வேறு பள்ளிகளில் இடமாற்ற செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment