ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர் 8 பேர் "சஸ்பெண்ட்'.
திருச்சி: "முறையான வழிகாட்டுதல்படி, பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, கவுன்சிலிங்கை புறக்கணித்து திடீர் போரட்டத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள் எட்டு பேர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும், கடந்த, 7ம் தேதி ஆதிதிராவிடர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், விடுதி வார்டன்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்தது.
திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்கள், 80 பேருக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், சையது முர்துஷா பள்ளியில் நடந்தது. சென்னை இயக்குனர் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் "சர்வர்' கோளாறு காரணமாக, மாலை, 4 மணிக்குத் தான் கவுன்சிலிங் துவங்கியது.
ஆனால், திருச்சியில் நடந்த கவுன்சிலிங்குக்கு வந்த ஆசிரியர்கள், "முறையான பணிமூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை. முறையான வழிகாட்டுதல் இல்லை' எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிலர், பத்திரிக்கையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும் பேட்டியளித்தனர். இச்சம்பவத்தால், நள்ளிரவு 2 மணி வரை கவுன்சிலிங் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தால், தமிழகத்தின் பிற மாவட்டத்திலும் கவுன்சிலிங் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மீடியாக்களுக்கு பேட்டியளித்த, எட்டு ஆசிரியர்கள் நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செந்தாமரை கூறுகையில், ""கவுன்சிலிங்கை தடுத்து நிறுத்தியதாக எட்டு ஆசிரியர்களை நலத்துறை கமிஷனர் விஜயராஜ்குமார் "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்களது பெயர் பட்டியலை நான் கூற இயலாது,'' என்றார்.
No comments:
Post a Comment