அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி:
 பள்ளிக் கல்விச் செயலர் டி.சபீதா தகவல்


தொடக்கக் கல்வித் துறையின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டி.சபீதா தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியது:


பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை (Education Management Information System) என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அலுவலர்கள், பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவர்களுக்குத் தேவையான கூடுதல் விவரங்களும் இதில் உள்ளன.


இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க  வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்க  வேண்டும்.


இந்தப் புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர பயன்படுத்தப்படும். ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரும் போது மற்ற தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளையும் கணக்கெடுத்து அவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.


பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment