அரசின் கட்டண நிர்ணயம், சி.பி.எஸ்.சி., பள்ளிக்கும் பொருந்தும்.

22-09-2012.

சென்னை: "தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, தமிழக அரசு கடந்த, 2009ம் ஆண்டு, கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தை இயற்றியது. நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, தமிழகத்தில் உள்ள, 10,934 தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை, கடந்த, 2010ம் ஆண்டு நிர்ணயித்தது.
இதை எதிர்த்து, 6,400 பள்ளிகள், மேல் முறையீடு செய்தன. மாநில அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், தங்களைக் கட்டுப்படுத்தாது என்று சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் முறையிட்டன. இதை நிராகரித்த, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான, புதிய கட்டண நிர்ணயக் குழு, மேல் முறையீடு செய்த, 6,400 பள்ளிகளுக்குமான புதிய கட்டணத்தை நிர்ணயித்தது.
சென்னை திருவொற்றியூர் கவிபாரதி வித்யாலயம் பள்ளி உள்ளிட்ட சில, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், இதனை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தன. அம்மனுக்களில், "மாநில அரசு தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய பின், சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய விதிகளுக்கு உட்பட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் சட்டத்தில் குறிப்பிடும் தனியார் பள்ளிகள் என்பது இங்குள்ள நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழக அரசின் இந்த சட்டம் சி.பி.எஸ்.இ., பள்ளிகளையோ அல்லது ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையோ கட்டுப்படுத்தாது&' என்று கூறப்பட்டது. இவை மீதான விசாரணை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பில், தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்று மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தில் குறிப்பிடப்படும் தனியார் பள்ளிகள் என்ற வரையறை, மாநில எல்லைக்குள் செயல்படும் சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அந்த சட்டத்தின்படி, தமிழகத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, 25 சதவீத மாணவர்களை சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும்.
அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அந்தப் பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்குகிறது. அப்படியிருக்கும் போது, தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தை ஒழுங்குப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசுக்கு நிச்சயமாக உள்ளது.
சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கும் உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment