ஏ.டி.எம்.,மில் பணம் ரிசர்வ் வங்கி புது உத்தரவு
புதுடில்லி:ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தை மீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், தேவையான தொகையை இயந்திரத்தில் பதிவு செய்ததை அடுத்து, சில வினாடிகளில், ரூபாய் நோட்டுகள் வெளிவரும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வாடிக்கையாளர்கள் அவற்றை கையில் எடுக்காவிட்டால், அந்த ரூபாய் நோட்டுகளை இயந்திரம் மீண்டும் உள்ளிழுத்துக் கொள்ளும்.
அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த நடைமுறையே அமலில் இருந்தது. இந்நிலையில், பணத்தை இயந்திரம் இழுத்துக் கொண்டதாக ஏராளமான புகார்கள், வங்கிகளுக்கு வந்த வண்ணம் இருந்தன.இப்புகார்களை பரிசீலித்த, தேசிய பணப்பட்டுவாடா கமிஷன், ஏராளமானவை பொய் புகார்களாக இருப்பதை கண்டுபிடித்தன. இதையடுத்து, ஏ.டி.எம்., மையங்களில் இந்த வசதியை நீக்க உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து, வங்கி ஏ.டி.எம்.,களில், வாடிக்கையாளர்களால் எடுக்கப்படாத ரூபாய் நோட்டுகளை இயந்திரம் உள்ளிழுக்கும் வசதியை ரத்து செய்து, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டும் வருகின்றன.
No comments:
Post a Comment