விண்கற்கள் விழுந்து ரஷ்யாவில் 900 பேர் காயம்.


 ரஷ்யாவில் விண்கற்கள் விழுந்ததில், 900 பேர், காயமடைந்தனர். விண்வெளியில் சுற்றி வரும் கோள்களுடனும், மற்ற சிறுகோள்களுடனும், "ஆஸ்ட்ராய்டு' எனப்படும் சிறுகோள்கள் மோதும்போது, தெறிக்கும் சிறு பாறைகள், "விண்கற்கள்' எனப்படுகின்றன.


இவை, புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படுவதால், பூமியில் விழுகின்றன. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில், யூரல் மலை அமைந்த, செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில், காலை, விண்ணில் இருந்து பறந்து வந்த, விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர். விண்கற்கள் விழுந்து சிதறியதால், கட்டிடங்களில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன. செல்யாபின்ஸ்க் பல்கலைக்கழக கட்டிடம், சேதமடைந்தது. விண்கல் விழுந்த அதிர்ச்சியில், துத்தநாக தொழிற்சாலை ஒன்றின் கூரை, இடிந்து விழுந்தது.


பணியில் விமானங்கள் :

"இந்த சம்பவங்களில், 84 சிறுவர்கள் உள்பட, 900 பேர் காயமடைந்தனர்' என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான, "ராஸ்கோஸ்மாஸ்' அதிகாரிகள் குறிப்பிடுகையில், "இந்த விண் கற்கள் மூன்று இடங்களில் விழுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளன. 30 கி.மீ.,வேகத்தில் விண்கல், பூமியில் விழுந்துள்ளது. இந்த விண்கல் துகள்களில் உள்ள ரசாயனம், கதிர்வீச்சு உள்ளிட்ட தன்மைகளை, ஆராய உள்ளோம்' என்றனர். விண்கல் துகள்கள் எந்தெந்த இடங்களில் விழுந்துள்ளது, என்பதை தேடுவதற்காக, மூன்று விமானங்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

விண்கற்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்களை மீட்கும் பணியில், 20 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விண்கல் விழுந்ததால், இன்டெர்நெட் மற்றும் மொபைல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூமிக்கு அருகே இன்று, "2012 டிஏ 14' என்ற, பெயர் கொண்ட ஆஸ்ட்ராய்டு(சிறுகோள்) ஒன்று, வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்யாவில், விழுந்த விண்கற்களுக்கும், இன்று பூமிக்கு அருகே வரும், 2012 டிஏ 14 க்கும் தொடர்பில்லை' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment