ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி.
சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான, தகுதி தேர்வு, கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்தது. தகுதி மதிப்பெண், 60 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்டோர், சொற்ப அளவிலே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, கடந்த ஆண்டு, அக்டோபரில், மீண்டும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, 15 பேர், ஐகோர்ட்டில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தி, சலுகை காட்டுமாறு, கல்வித் துறைக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும் என, கோரப்பட்டது.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி, சந்துரு பிறப்பித்த உத்தரவு:முதலாவதாக நடந்த தகுதி தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்ததால், இரண்டாவதாக, தகுதி தேர்வை, அரசு நடத்தியது.
இரண்டாவது தேர்விலும், மனுதாரர்கள் தேர்ச்சி பெறவில்லை. மற்ற மாநிலங்களில், தகுதி மதிப்பெண்ணில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், இங்கும் வழங்க வேண்டும் என, கோருகின்றனர்.
மற்ற மாநிலங்களில் சலுகைகள் வழங்குவது, தமிழகத்தை கட்டுப்படுத்தாது. குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் கல்வி தரத்தில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை, பரிசீலிக்க விரும்பவில்லை. கல்வி தரத்தை குறைக்கும் வகையில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி, சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment