திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் உதவியுடன் பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது அம்பலம் போலீஸ் சோதனையில் போலிமுத்திரைகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி கைதானவரின் அறக்கட்டளை அலுவலகம், வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களும், குவியல், குவியலாக போலி முத்திரைகளும் சிக்கின.
அறக்கட்டளை தலைவர் கைது
திருச்சி மாநகரில் ஜீவாநகர், கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 200–க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களது ரேஷன் கார்டை வாங்கி மகளிர் சுய உதவிக்குழுக்கள் இருப்பது போன்று காண்பித்து அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று ரூ.34 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி மாரீஸ் தோப்பு பகுதியை சேர்ந்த ‘ஆராதனா’ அறக்கட்டளை தலைவர் சபரி ஆனந்தனை (வயது 65) கடந்த 15–ந்தேதி கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் சோதனை
மேலும் ரேஷன்கார்டுகளை பொதுமக்களிடம் இருந்து வாங்கி கொடுத்த மலைகோட்டை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி, மேகலா ஆகிய 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக கைதான சபரி ஆனந்தனின் வீடு மற்றும் அறக்கட்டளை அலுவலகத்தில் சோதனை நடத்த கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்றனர்.
அதன்படி கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுமரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், தாவூத்கான், ஏட்டுகள் ராஜமாணிக்கம், சுப்புராஜ் மற்றும் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் சபரி ஆனந்தனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது மனைவி புவனா, மகன் தீபக்ராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்பு வீட்டின் உள்ளே அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
குவியலாக போலி முத்திரைகள்
அதனை தொடர்ந்து திருச்சி சிங்காரதோப்பு அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள அறக்கட்டளை அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கு கதவை திறந்து உள்ளே சென்றதும் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு குவியல், குவியலாக முத்திரை சீல்கள் மூட்டையில் இருந்தன. அதனை எடுத்து போலீசார் பார்த்த போது அதில் மகளிர் குழுவின் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தன.
இந்த முத்திரை சீல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பெயர் இருந்ததை பார்த்து போலீசார் திகைத்தனர். இந்த முத்திரை சீல் எண்ணிக்கை மொத்தம் சுமார் 500–க்கு மேல் இருக்கலாம் என தெரிவித்தனர். இதேபோல ரேஷன் கார்டு ஜெராக்ஸ் தாள்கள் கட்டுக்கட்டாக இருந்தன. மேலும் சம்பந்தபட்ட வங்கியின் கணக்கு புத்தம் பல இருந்தன. இதனை எடுத்து பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
பல ஆவணங்கள் சிக்கின
அதேபோல அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயர் எழுதப்பட்ட நோட்டுகள் சுமார் 100–க்கும் மேல் அதில் இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது போலீசாருக்கே தலைசுற்றியது. போலியான மகளிர் குழுவின் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்த முத்திரை சீல்கள், பத்திரங்கள், நோட்டுகள், ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அங்கிருந்த பொருட்கள் பலவற்றை போலீசார் கைப்பற்றி அதனை சரக்கு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். முன்னதாக இந்த சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. கைப்பற்றபட்ட ஆவணங்களை வைத்து புலன் விசாரணை செய்யும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
இதற்கிடையில் கைதான சபரி ஆனந்தனை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1–ல் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மாஜிஸ்திரேட்டு பிரியங்கா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்து, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை சபரி ஆனந்தனை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து புலன் விசாரணை செய்தனர். விசாரணை முடிந்ததும் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு கைதியை ஆஜர்படுத்த மாஜூஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்றும், நாளையும் விசாரணை முடிந்ததும் நாளை மாலை சபரி ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மொத்த பணம் எவ்வளவு?
சபரி ஆனந்தன் மோசடி செய்த மொத்த தொகை எவ்வளவு? எத்தனை பேரின் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது? அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் வேறு நபர்களுக்கும் தொடர்பு உண்டா? மோசடி செய்த பணம் என்ன ஆனது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment