அனைவருக்கும் கல்வி திட்ட நிதி முறையாக செலவு செய்யாததை சுட்டிக்காட்டிய ஆசிரியர் பயிற்றுனரை இடமாற்றம் செய்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
அனைவருக்கும் கல்வி திட்ட நிதி முறையாக செலவு செய்யப்படாததை சுட்டிக்காட்டிய ஆசிரியர் பயிற்றுனரை இடமாறுதல் செய்து கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்றுனர்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பலன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், எம்.எஸ்.சி படித்து விட்டு பி.எட் முடித்துள்ளேன். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியராக தேர்ந்து எடுக்கப்பட்டேன். திருவாரூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய நான், தற்போது நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருகிறேன். தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறேன்.
ரத்து செய்ய வேண்டும்
ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்காக மத்திய அரசு ஏராளமான பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணம் முறையாக செலவு செய்யப்படவில்லை என்றும், முறையாக செலவு செய்யப்பட வேண்டும் என்றும் எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்காரணமாக, என் மீது வட்டார வள மைய கண்காணிப்பாளர் கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.
இந்த புகாருக்கு, நான் விளக்கம் அளித்துள்ளேன். இருந்த போதிலும் என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி என்னை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு இடமாறுதல் செய்து அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் 24.1.2013 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து கடையநல்லூரில் பணியாற்ற அனுமதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இடைக்கால தடை
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரை இடமாறுதல் செய்து கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், நெல்லை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment