ஆசிரியர்பட்டயப்பயிற்சி
"கவுன்சலிங்'நிறைவு:- திருச்சி மாவட்டத்தில், 48 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
திருச்சி: ஆசிரியர் பட்டயப்பயிற்சியில் கவுன்சிலிங் மூலம் திருச்சி மாவட்டத்தில், 48 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சேர ஆள் இல்லாமல் காலியாக உள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் பட்டயப்பயிற்சி நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில், மாவட்ட இடைநிலை கல்வி ஆசிரியர் பயிற்சி மையம் (டயட்) 1, அரசு உதவி பெறும் பயிற்சி மையங்கள் 4, சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 21 என மொத்தம், 26 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாவட்டத்தில் உள்ளது.இதில் டயட்டில் நூறு இடங்களும், மற்ற பயிற்சி மையங்களில், 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் கடந்த, 8ம் தேதி துவங்கியது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில் உள்ள இடைநிலை கல்வி திட்ட அலுவலகத்தில் நடந்தது.
இதில் பங்கேற்க, 73 பேர் விண்ணப்பத்திருந்தனர். அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. முதல் நாளான, 8ம் தேதி சிறப்பு பிரிவில் ஒருவரும், 9ம் தேதி தொழில் பிரிவில், 6 பேரும் சேர்ந்தனர். 10, 11ம் தேதிகளில் கலைப்பிரிவு மற்றும் 12, 13, 15ம் தேதிகளில் அறிவியல் பிரிவுக்கு கவுன்சிலிங் நடந்தது. கடைசி நாளான நேற்று வரை மொத்தம், 48 பேர் மட்டுமே கவுன்சிலிங் மூலம் சேர்ந்துள்ளனர்.
டயட் மற்றும், 25 பயிற்சி மையங்களிலும் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களான, ஆயிரத்து, 350 இடங்களில், வெறும், 48 பேர் மட்டுமே சேர்ந்திருப்பதால், ஆயிரத்து, 300 இடங்கள் காலியாக உள்ளது.
இதுதவிர அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பயிற்சி மையங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 50 சதவீத இட ஒதுக்கீட்டிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த பட்டயப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால், மூப்பு அடிப்படையில் பணி கிடைக்க, பத்து ஆண்டுகளுக்கு மேலாகும். அதோடு, இந்த பயிற்சியை முடித்த பிறகு, ஆசிரியர் தகுதி தேர்வை தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணயில் சேர முடியும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக கொடுத்து இப்பயிற்சி மையங்களில் சேர கடும் போட்டி நிலவியது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி, சேருவதற்கு ஆள் இல்லாத நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment