திறந்தவெளியில் கல்வி கற்பிக்கும் அவலம்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பூலங்குடி காலனியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால், கடந்த 4 ஆண்டுகளாகவே திறந்தவெளியில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கானங்குடி ஊராட்சிக்குள்பட்டது பூலாங்குடி காலனி. இங்கு அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் பூலாங்குடி காலனி, கலப்பு காலனி, பழங்கானங்குடி, எலந்தைப்பட்டி, காந்தலூர், சூரியூர், சின்னசூரியூர், போலீஸ் காலனி, அண்ணாநகர், துப்பாக்கி தொழிற்சாலை, நவல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலில் இருந்து 600 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
ஆண்டுதோறும் இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வந்ததால், இப்பள்ளி கடந்த 2009-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால், அருகில் உள்ள பழங்கானங்குடி சாலையில் சர்வே எண். 14 ஏ-ல் உள்ள அரசுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த நிலத்தை அளவீடு செய்த வருவாய்த் துறையினர் 4 ஆண்டுகளாகியும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.
இதனால், தற்போது உள்ள இடத்திலேயே உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. குறுகலான இடமாக உள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு திறந்தவெளியில் கல்வி கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு பள்ளிக்கு விளையாட்டு மைதானம், அறிவியல் ஆய்வுக் கூடம், காற்றோட்டமான இட வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், இப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறியது:
நடுநிலைப் பள்ளியாக இருந்த போதிலிருந்து எங்களது குழந்தைகள் இப்பள்ளியில்தான் படித்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த அரசுப் பள்ளியில்தான் படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பள்ளிக்கு போதிய இடம் மற்றும் கட்டட வசதி இல்லாததால், மாணவர்களுக்கு திறந்தவெளியில் கல்வி கற்பிக்கும் நிலை உள்ளது. மேலும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இங்கு கிடையாது என்றனர்.
தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடிச் செல்லும் தற்போதைய காலகட்டத்தில், அரசுப் பள்ளியில் அதிகளவிலான மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டும் அங்கு போதிய இட வசதி இல்லாததால் திறந்தவெளியில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து பூலாங்குடி காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இட வசதி மற்றும் கட்டட வசதியுடன் அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment