அரசுப் பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டில் பொதுவான தேர்வு


 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளை மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டிலேயே (2012-13) இதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய வழிமுறைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

 முதலில் மாநிலம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சுமார் 8 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 வகுப்பில் சுமார் 5 லட்சம் பேரும் படித்து வருகின்றனர்.


 இப்போதுள்ள நடைமுறையின்படி, அந்தந்த மாவட்டத்திலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலான தேர்வுக்குழுதான் இந்த வினாத்தாள்களைத் தயாரித்து வருகின்றன.
 இந்த வினாத்தாள்கள் பல்வேறு தரத்தில் இருப்பதால், அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக முடிவதில்லை. எனவே, மாநிலம் முழுவதும் ஒரே விதமான தேர்வு நடத்தவும், வினாத்தாள் வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா கூறியது: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

 இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

 பொதுத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்ய காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டிலிருந்து மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடத்தப்படும்.

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு "நோட்ஸ்': தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நோட்ஸ் வழங்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற நோட்ஸ் கிடைப்பதில்லை.

 எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் "நோட்ஸ்'  தயாரிக்க முடிவு  செய்யப்பட்டது.
மிகச்சிறந்த முறையில் நோட்ûஸ தயாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நோட்ஸ் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார் அவர். இந்த வினாத்தாள்களை தயாரிக்கும் பொறுப்பு அரசுத் தேர்வுகள் இயக்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

  

No comments:

Post a Comment