மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குவதற்கு
தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து
மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வர இலவசமாக
அரசு பஸ்களில் பயணிக்கலாம் என
போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான பஸ் பாஸ் ஆண்டு முழுவதும் சேதமடையாமலிருக்க நடப்பு கல்வியாண்டில் "ஸ்மார்ட் கார்டு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த "ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் பொறுப்பு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆன போதிலும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் அரசு பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம், சீருடையில் உள்ள மாணவர்களை இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர அரசு பஸ்களில் இலவசமாகப் பயணிக்கலாம்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான பள்ளிகளில் பஸ் பாஸ் வழங்கப்பட்டு விட்டது.
ஒரு சில பள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க தாமதித்ததனால் அந்தப் பள்ளிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' பஸ் பாஸ் வழங்க முடியவில்லை. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.
No comments:
Post a Comment