முதல்வர் கையெழுத்துடன் போலி கடிதம்
தயாரித்தவர் கைது
சென்னை : ஆசிரியை மாறுதலுக்கு, முதல்வரின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை, போலியாக தயாரித்த அச்சக உரிமையாளர் மற்றும் போலி அரசு முத்திரை தயாரித்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டை, சுபேதார் உசேன் தெருவில் அச்சகம் நடத்தி வருபவர் பிரின்சி எட்வின், 42; கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை பமீலா, சிவகங்கை மாவட்டம் நும்பையூர் அரசுப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற, தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம், பமீலா மனு கொடுத்தார். அவரது முயற்சி தோல்வியடைந்ததால், சென்னையில் வசித்து வரும் பிரின்சி எட்வினை தொடர்பு கொண்டார். ஆசிரியை பணி மாறுதல் பெற்றுத் தருவதாக, பிரின்சி எட்வின் கூறியுள்ளார்.
ஆசிரியை பமீலா, பணி மாறுதல் வேண்டி தலைமைச் செயலகத்தில் உள்ள, முதல்வர் தனிப்பிரிவில் கொடுத்த மனுவின் நகலை வாங்கிய பிரின்சி எட்வின், அதில், பச்சை நிறத்தில், முதல்வரின் கையெழுத்தை ஆங்கிலத்தில் போட்டு, போலியான கடிதத்தை தயாரித்தார்.
அதை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பினார். அரசு முத்திரையிடப்பட்ட கவரில் வந்த அக்கடிதத்தை, கடந்த, 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் மணி, பிரித்துப் பார்த்தார்.
அதில், "பார்வேர்டு' என பச்சை நிறத்தில், முதல்வரின் கையெழுத்து ஆங்கிலத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, முதல்வர் ஜெயலலிதா, தமிழில் கையெழுத்திட்டு வருவதால், சந்தேகமடைந்த இயக்குனர் மணி, முதல்வரின் தனிப்பிரிவில் விசாரித்தார். அப்போது தான் முதல்வரின் கையெழுத்தை, போலியாக ஒருவர் போட்டிருப்பது அம்பலமானது.
இதுகுறித்து, கோட்டையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி சபீதா, கமிஷனர் திரிபாதியிடம் பேசி, மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். இதற்கிடையே, முதல்வர் தனிப்பிரிவில் இருந்து கடிதம் அனுப்பிய நபரை பற்றிய எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரின்சி எட்வின், பள்ளி கல்வித்துறை வளாகத்திற்குச் சென்றார். அங்குள்ள அதிகாரிகளிடம், "நான் முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து வருகிறேன். முதல்வர் தனிப்பிரிவில் இருந்து, ஆசிரியை பணி மாறுதல் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்' என, அதட்டலாக கேட்டார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவிற்கு போன் செய்து விவரத்தைக் கூறினர்.
"அது போன்று எந்த நபரையும் நாங்கள் அனுப்பவில்லை' எனக் கூறிய முதல்வர் தனிப்பிரிவு அதிகாரிகள் கூறினர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் சரவணன், அவரிடம் விசாரணை நடத்தினார்.
போலி பரிந்துரைக் கடிதம் தயாரித்த பிரின்சி எட்வின், அரசு முத்திரையை போலியாக தயாரித்து கொடுத்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த முரளி, 43, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment