2- ஆம் பருவ பாடபுத்தகங்கள்  செப்டம்பரில்  
வழங்கப்படும்   


 இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. 

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறையை தமிழக அரசு நடப்பாண்டில் அறிமுகம் செய்தது.
அதனடிப்படையில், 
.
   சமச்சீர் கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகமும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பருவத்துக்கு 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன. இரண்டாம் பருவத்திற்கான இந்தப் புத்தகங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் முதல் வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் கே. கோபால் தெரிவித்தார்.

   மேலும் அவர் கூறியதாவது, இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் அடங்கிய சி.டி.க்கள் எங்களிடம் வழங்கப்பட்டு விட்டன. புத்தகங்களை அச்சிடும் பணி இப்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.முதல் பருவத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்தப் பருவத்தில் அந்தப் புத்தகங்களை மேம்படுத்தி, ஒவ்வொரு புத்தகமும் 200 பக்கத்துக்கு மிகாத வகையில் அச்சிடப்படுகின்றன.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள புத்தகங்கள் தனி கவனத்துடன் அதிக படங்கள் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பருவத்துக்காக 1 கோடியே 41 லட்சத்து 30 ஆயிரத்து 500 இலவசப் புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த புத்தகங்களில் தமிழ் வழிப் புத்தகங்களே அதிகம் இருக்கும்.தனியார் பள்ளிகள் மற்றும் சில்லறை விற்பனைக்காக 76 லட்சத்து 38 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

   மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அக்டோபர் மாதத்தில்தான் இரண்டாம் பருவம் தொடங்குகிறது. ஆனால், செப்டம்பர் முதல் வாரத்துக்குள் புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிடும் என்றார் கே.கோபால்.

    புத்தகங்களின் விலை நிர்ணயம்: முப்பருவ முறையின் கீழ் இரண்டு, மூன்றாம் பருவங்களுக்கான புத்தகங்களின் விலையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள் காரணமாக புதிய புத்தகங்களின் விலை சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, முதல் பருவத்தோடு ஒப்பிடும்போது 1, 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் ரூ.10 வரையிலும், 3, 4, 5, 6 வகுப்புகளுக்கான புத்தகங்களில் ரூ.5 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 7, 8 வகுப்புகளுக்கான புத்தகங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. 2-ம் பருவ பாடப்புத்தகங்கள், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment