கல்வி உதவித் தொகை வழங்காத 

அதிர்ச்சி தகவல் 



ஆதி திராவிட மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் மோசடியின் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கோவை மண்டல தணிக்கை பிரிவு அலுவலர்கள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 12 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரு சில பள்ளிகளில், ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்காத அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை, துப்புரவு உள்ளிட்ட சுகாதாரமற்ற தொழில் செய்யும் ஆதி திராவிட பெற்றோரது குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

77 பேர் இடைநீக்கம்: அதன்படி, 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை பள்ளி தலைமையாசிரியர்கள், "கையாடல்' செய்ததாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்காமல், "ஏப்பம்' விட்டது உறுதி செய்யப்பட்டது. கையாடலில் ஈடுபட்ட, 77 பள்ளி தலைமையாசிரியர்களை, ஆகஸ்ட் 3ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

அடுத்த புகார்: இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கும், மேற்குறிப்பிட்ட கல்வி உதவித் தொகை, 1,850 ரூபாய் வழங்கப்படவில்லை. அத்தொகையையும், பள்ளி தலைமையாசிரியர்கள் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. சென்ற 4ம் தேதி, பள்ளிக் கல்வித் துறை கோவை மண்டல தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்தனர். அக்குழுவினர் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலகத்துக்குச் சென்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகை விவரத்தை சேகரித்தனர்.

நேரடி விசாரணை: அதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து விசாரித்தனர். மாவட்டம் முழுவதும், 146 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 12 பள்ளி தலைமையாசிரியர்கள் மட்டும் நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, மேற்குறிப்பிட்ட, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருந்தது.

ஆய்வில் அதிர்ச்சி: பெரும்பாலான பள்ளி நிர்வாகத்தினர், அந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட துறையினரிடம் இருந்து பெற்று, மாணவர்களுக்கு வழங்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது. இது, விசாரணை நடத்திய தணிக்கை பிரிவு கணக்கு அலுவலர் குழுவினரை, அதிர்ச்சியடையச் செய்தது. அதையடுத்து, 6ம் தேதி (நேற்று) முதல், மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்குழுவினர் நேரடியாக விசாரணை செய்ய முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென அக்குழுவினர், விசாரணை எதுவும் செய்யாமல் கோவை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய, கோவை மண்டல பள்ளிக் கல்வித் துறை தணிக்கை பிரிவு அலுவலர்களை, நாங்களாக வரவழைத்து ஆய்வு செய்தோம். மொத்தம், 12 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன. அதில் ஒரு சில பள்ளிகளில் கல்வி உதவித் தொகை வழங்காதது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்தால், பள்ளிகளில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பொன்னையா கூறினார்.


No comments:

Post a Comment