முதலமைச்சரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்தி
சென்னை, ஆக., 14 : ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்து, உலக நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு, அடிமை விலங்கினை தகர்ந்தெறிந்த இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் நம் தாய் திருநாடு அடிமைப்பட்டு, சொல்லொணா துன்பத்திற்கு ஆளானதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம். எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர வேள்வித் தீயில் சொரிந்த செந்நீராலும், கண்ணீராலும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.
அனைத்து மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, எல்லோரும் எல்லாமும் பெற்று, அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம் ஆகும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றிடும் இவ்வரசுக்கு தமிழக மக்கள் அனைவரும் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment