அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சி 407 பள்ளிகள் பங்கேற்பு.
13 Aug.
அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சி திருச்சி மாவட்ட அளவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 407 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
ஜான் வெஸ்ட்ரி பள்ளியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, திருச்சி மாவட்டம் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநிலத்தில் 12-ம் இடத்திலிருந்து தற்போது 4-ம் இடத்துக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 14-ம் இடத்திலிருந்து 7ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தக் கண்காட்சிக்காக ஒரு பள்ளிக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 20.35 லட்சத்தை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கி வழங்கியுள்ளதாகவும் மனோகரன் குறிப்பிட்டார்.
மாவட்ட ஆட்சியர் பேசும்போது, தற்போது பங்கேற்றுள்ள 407 பள்ளிகளில் இருந்து தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் 31 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சென்னைக்கு மாநில அறிவியல் புத்தாக்க விருதுக்கான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.
மாநிலக் கண்காட்சியில் தேர்வு செய்யப்படுவோர் தில்லியில் நடைபெறும் தேசியக் கண்காட்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் ஆட்சியர் ஜெயசிறீ தெரிவித்தார்.
விழாவில், மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்ஜோதி, மாநகராட்சி கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் திருநாவுக்கரசு (லால்குடி), பார்த்திபன் (முசிறி), விஜயேந்திரன் (திருச்சி), மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் வரவேற்ரார். மாவட்டக் கல்வி அலுவலர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment