உலக கல்வி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்குவதே லட்சியம்:மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா.

சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 155-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு சிறப்பு விருதினை வழங்கிய பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா. உடன், (இடமிருந்து) முதல்வர் ஜெயலலிதா, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன்.


பல்கலைக்கழகக் கல்விக்கான உலகக் கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 155-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த ஆளுநர் கே.ரோசய்யா, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் 1,160 பேர் பட்டங்களைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
அவரது உரை வருமாறு: ""156 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் நாட்டின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தோ - சார்சனிக் கட்டடக் கலையைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு ஒரு சிறு நட்சத்திரமாக உருவாகி, இன்று மிகப்பெரும் சூப்பர் நோவாபோல பரிமாணம் பெற்றுள்ளது.
நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் சர்.சி.வி.ராமன், டாக்டர் எஸ்.சந்திரசேகர், முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்பட ஆயிரக்கணக்கான அறிஞர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்துக்கு உண்டு.
இந்தப் பல்கலைக்கழகத்தில் உருவான நிபுணர்கள் இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் பரவியுள்ளனர். இன்று பட்டம் பெறும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் ஒளிரும் உதாரணங்களாகத் திகழ்கின்றனர்.
மூன்று செயல்கள்: கல்வி என்பது மனித குல முன்னேற்றத்துக்கும், மனிதனை ஆற்றல்படுத்துவதற்கும் உதவும் மிகப் பெரும் ஆயுதம். கல்வி சமூக மாற்றத்துக்கான முக்கிய கருவி. அடுத்த ஓராண்டு முன்னேற்றத்தைப் பற்றி கருதினால் நெல்லை பயிர் செய், அடுத்த பத்தாண்டுகளுக்கான முன்னேற்றத்தைப் பற்றி கருதினால் மரங்களை நடு, அடுத்த நூறாண்டுகளுக்கான முன்னேற்றத்தைப் பற்றி கருதினால் மக்களை அறிவு பெறச் செய் என்று ஒரு சீனப் பழமொழி உண்டு. எனது தலைமையிலான அரசு இந்த மூன்றையும் செய்திருக்கிறது.
உயர் தரம் மிக்க அறிவுசார் நிபுணர்களை தமிழ்நாட்டில் உருவாக்குவதும், பல்கலைக்கழகக் கல்வியின் உலகக் கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் எனது தலைமையிலான அரசின் மிக முக்கிய லட்சியம் ஆகும். அந்த நோக்கில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக, காணொலிக் காட்சியுடன்கூடிய செயல்திறன் வளர்க்கும் வகுப்பறைகள் ரூ.2 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலம், சீனம், ஜப்பான், ஜெர்மன் போன்ற அயல்நாட்டு மொழிகளைக் கற்பதற்கான மொழி ஆய்வகங்கள் ரூ.1.5 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டுள்ளன. தொழில்முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு மையங்கள் ரூ.2 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பபட்டுள்ளன. கற்பித்தல், கற்றலில் பன்னாட்டு செயல்திறன் நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக புகழ்பெற்ற வெளிநாட்டு பேராசிரியர்களை வரவழைக்கும் திட்டம் 10 பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலகத் தரத்துக்கு இணையாக பாடத் திட்டத்தை மறுசீரமைப்பதற்காக ரூ.10 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் பாடத் திட்ட வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற இளைஞர்களை திறன் பெறச் செய்யும் விதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் 22 கலை, அறிவியல் கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், 10 பாலிடெக்னிக்குள் தொடங்கப்பட்டுள்ளன.
நாட்டுக்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போதைய இன்டர்நெட் யுகத்தில் நவீன தொழில்நுட்ப அறிவில் நமது மாணவர்கள் பின்தங்கி விடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மூலம் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 402 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
இவை யாவும் நமது மாநிலத்தில் உயர் கல்வியை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் வெறும் மேலோட்டம் மட்டுமே. இன்று பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் உன்னதமான தேசத்தை கட்டியெழுப்ப தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
விழாவில் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் வரவேற்புரை நிகழ்த்தினார். உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment