அறிவியல் கண்காட்சி ரயில் வரும் 7ம் தேதி வரை, ஜங்ஷன், 7வது பிளாட்ஃபாரத்தில், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படுகிறது.

திருச்சி: மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, ரயில்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, விக்ரம் சாராபாய் அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து, நடமாடும் அறிவியல் மற்றும் பல்லுயிர் பெருக்க கண்காட்சி ரயிலை வடிவமைத்துள்ளது.


கடந்த, 2007ம் ஆண்டு முதல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த ரயில் பயணம் மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மாணவ மாணவிகள், பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.
இயற்கை வளங்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள், அரிய வகை உயிரினங்கள், தாவரவியல், கடல் வாழ் உயிரினங்கள், பருவ நிலையில் ஏற்படும் மாற்றம், ஆய்வகங்கள், மலை பிரதேசங்கள், யூனியன் பிரதேசங்கள் போன்றவை குறித்த காட்சிகள், 16 ரயில் பெட்டிகளில் இடம்பெற்றுள்ளது.

முதல், எட்டு பெட்டிகளில் இயற்கை வளங்கள், நதிகள், சமவெளிகள் உள்ளிட்ட புவியியல் காரணிகள் குறித்தும், அடுத்தடுத்த பெட்டிகளில், வரிசையாக காலநிலை மாற்றங்கள் குறித்தும், பாதுகாப்பான சுற்றுச்சூழல், எரிசக்தி சேமிப்பு, குழந்தைகளுக்கான அறிவியல் புதிர்கள், அறிவியல் சோதனை சாலை உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி ரயிலின், நான்காவது கட்ட பயணம், கடந்த ஏப்ரல், 9ம் தேதி டில்லியில் துவங்கியது.


இந்த ரயில் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். வரும், 7ம் தேதி வரை, ஜங்ஷன், 7வது பிளாட்ஃபாரத்தில் இந்த ரயில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படுகிறது.


 காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரை, கண்காட்சியை பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment