குடிநீர், கழிவறை, நூலக வசதிகள் உள்ளதா?: பள்ளிகளை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழு- தமிழக அரசு உத்தரவு.

சென்னை, அக்.27-
 
பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகள் எல்லாவித வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிக் கூடங்களை கண்காணிக்க 5 பெண்கள் கொண்ட குழுக்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 22-ந்தேதி இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அம்மாக்கள் மட்டுமே அந்த பெண்கள் குழுவில் இடம் பெறுவார்கள். அவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த குழுவில் இடம் பெறும் பெண்கள் வாரத்துக்கு ஒரு தடவை தங்கள் மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வார்கள்.
 
பள்ளியில் குடிநீர், கழிவறை, பரிசோதனை கூடம், நூலகம், கம்ப்யூட்டர்கள், விளையாட்டு மைதானம், மற்றும் வகுப்பறைகளில் உள்ள அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு உள்ளதா என்று அவர்கள் பார்வையிடுவார்கள். பிறகு அதுபற்றி அவர்கள் பள்ளியில் உள்ள குறிப்ப பேட்டில் எழுதுவார்கள்.
 
அதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் பதில் தெரிவிப்பார்கள். இந்த புதிய திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுவதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment