கால்கள் இழந்தவரை நாள்தோறும் வீல்சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள்.

திருச்சி: போலியோவால் கால்கள் செயலிழந்த கல்லூரி மணவரை, அவரது நண்பர்கள் நாள்தோறும் வீல் சேரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சியில் நடக்கிறது.


திருச்சி அருகே எலமனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன். இவரது மனைவி பாலாயி. இவர்களுக்கு பால்ராஜ், கருணாநிதி என்ற, இரு மகன்களும், தமிழ்மணி, தவமணி என்ற, இரு மகள்களும் உள்ளனர். கடைசி மகனான கருணாநிதிக்கு, 23, தடுப்பூசி சரியாக போடாததால், குழந்தை பருவத்திலேயே போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன.ஒன்றாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை, அப்பகுதியில் உள்ள சேவை சாந்தி மெட்ரிக்., பள்ளியில் தங்கி படித்தார். பின்னர் திருப்பராய்துரை விவேகானந்தா பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். தொடர்ந்து, கரூர் மாவட்டம் மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தங்கி ஆசிரியர் பயிற்சி படித்தார்.

கால்கள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத கருணாநிதி, பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். திருச்சி தேசிய கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முடித்து, தற்போது எம்.ஏ., சேர்ந்துள்ளார். பள்ளியில் தங்கி படித்து வந்த அவருக்கு, கல்லூரி செல்வது பெரும் சவாலாக அமைந்தது. கல்லூரி செல்வதாக இருந்தால், தினமும் திருச்சி வந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான் அவருக்கு நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்கள் உதவியுடன் கல்லூரி சென்று வருகிறார். மாற்றுத்திறனாளியான கருணாநிதி, வீட்டிலிருந்து கையால் பெடல் அழுத்தும் மூன்று சக்கர வண்டியில் எலமனூர் ரயில்வே ஸ்டேஷன் வருவார். அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அந்த வண்டியை வைத்துவிட்டு, நண்பர்களுக்காக காத்திருப்பார்.

நண்பர்கள் வந்ததும் அவரை ரயில் ஏற்றி விட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருக்கும் வீல் சேரை கையோடு எடுத்து வருவர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்ததும், கருணாநிதியை இறக்கவிட்டு, வீல் சேரில் அவரை அமர வைத்து, இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள தேசிய கல்லூரிக்கு நண்பர்கள் அழைத்து வருவர். நாள்தோறும் யாராவது ஒரு நண்பர், கருணாநிதியை வீல் சேரில் அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.நாள்தோறும் காலை, 9.15 மணிக்கு, வீல் சேரில் கருணாநிதியை அவரது நண்பர்கள் அழைத்துச்செல்வதை காண முடியம்.

இதுகுறித்து கருணாநிதி கூறியதாவது:போலியோ தற்போது தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயம். போலியோவால் பாதிக்கப்பட்ட என்னை, என் பெற்றோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனில்லை. தீமையிலும் நன்மை உண்டு என்பது போல, போலியாவால் பாதிக்கப்பட்ட எனக்கு ஆத்மார்த்தமான நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.உண்மையில் போலியோவுக்கு நன்றி சொல்ல வேண்டும். குரு, சிலம்பரசன், ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், முரளி, காளிதாஸ், சுதாகர், பார்த்திபன், தினேஷ்குமார், மணிமாறன், ரமேஷ், ராஜசேகர் என, எனக்கு உதவிய நண்பர்கள் அதிகம். ஆங்கில பேராசிரியராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி என் பயணம் உள்ளது. அந்த பயணம் தொடர எனக்கு துணையாக, என் நண்பர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கை, கால் நன்றாக உள்ள நிலையில் கூட பலரும் உழைத்து வாழ விரும்பாத நிலையில், போலியாவால் காலை இழந்த நிலையிலும் படிப்பின் மீது கொண்ட தணியாத தாகத்தால் நண்பர்கள் உதவியுடன், மனதளராமல், தினமும், 60 கிலோமீட்டர் பயணம் செய்து எம்.ஏ., படிக்கும் கருணாநிதி, உடல் ஊனமுற்றோருக்கு, ஏன், நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிறார்.அவருக்கு நண்பர்கள் செய்யும் உதவியோ, நட்பின் இலக்கணமாக, உதவும் மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.


No comments:

Post a Comment