ஆசிரியர்கள், மாணவர்கள் விவரம் திரட்டுகிறது  பள்ளி கல்வித்துறை.


திருப்பூர்:பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பற்றிய முழு தகவல்களை சேகரித்து, புதிதாக துவக்கப்பட்டுள்ள இணைய தளங்களில் வெளியிட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இ.எம்.டி.எஸ்., (எஜூகேஷனல் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பதுடன், பள்ளிகளில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் தொகுக்கப்படுகிறது.

இத்தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வு கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை எவ்வாறு சேகரிப்பது என்பது தொடர்பான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளி வாரியாக தொகுக்கப்படும் விவரங்கள் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். முதன்மை கல்வி அலுவலகத்தில், இதற்கான சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக, அடிப் படை தகவல்களை மட்டுமே தொகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக, பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும்.பள்ளி திறக்கப்பட்ட நாள், மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இதேபோல், மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்படும். ஆசிரியர்கள், அவர்கள் பணி யில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்.அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை ஆகியவை இ.எம்.டி.எஸ்., திட்டப்பணியில் முழுமையாக ஈடுபடுகின்றன. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., மூலமாகவும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாகவும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, ""இ.எம்.டி.எஸ்., திட் டத்துக்காக, பள்ளி கல்வித்துறை தரப்பில் புதிதாக நான்கு இணைய தளங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களின் விவரங்கள் தொகுக்கப்பட உள்ளன. இதுகுறித்து வரும் 3ம் தேதி, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது,'' என்றார்.


No comments:

Post a Comment