அரசு பள்ளி ஆசிரியர்கள் "டியூசன்' நடத்த தடை:கல்வித்துறை இணை இயக்குனர் அதிரடி.


சேந்தமங்கலம்: பாடம் நடத்தாமல், வகுப்புக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், விசாரணை நடத்திய, கல்வித்துறை இணை இயக்குனர் திரு. ராம்ராஜ், "ஆசிரியர்கள் யாரும், இனி டியூசன் எடுக்கக்கூடாது' என, உத்தரவிட்டார்.

நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியராக ரவிச்சந்திரன் உள்ளார். ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இயற்பியல் பாடப்பிரிவு ஆசிரியராக நாகராஜன், 40, என்பவர் பாடம் நடத்துகிறார்.
அவர், பள்ளி துவங்கியது முதல் வகுப்புக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தவில்லை என புகார் எழுந்தது. மேலும், தனது நண்பர் மலர் மன்னன் நடத்தும் டியூசன் சென்டருக்கு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் கட்டாயம் செல்ல வேண்டும் என வற்புறுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்டது.

அதேபோல், தனது நண்பரின் டியூசன் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறையில் மாதிரி தேர்வு நடத்தியுள்ளார். அதனால், மாணவர்கள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். ஆவேசமடைந்த மாணவர்கள், செப்டம்பர், 9ம் தேதி, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாநில கல்வித்துறை இணை இயக்குனர் ராமராஜ் தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் ஆகியோர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பி.டி.ஏ., நிர்வாகிகள், பெற்றோர்கள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில், "இப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் சிறப்பு வகுப்பு (டியூசன்) நடத்தக்கூடாது' என, இணை இயக்குனர் ராமராஜ் அதிரடி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும், "நாங்கள் யாரும் டியூசன் நடத்த மாட்டோம்; ஒருமித்த கருத்துடன் பள்ளி மேம்பாட்டுக்காவும், மாணவர்களின் நலனில் அக்கரையுடனும் இணைந்து செயல்படுவோம்' என, எழுத்துப்பூர்வமாக எழுத்திக் கொடுத்தனர்.
ஒவ்வொரு வாரமும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினர், பள்ளியை திடீர் ஆய்வு செய்து, பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
டியூசன் ஆசிரியருக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறியதாவது:
அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு டியூசன் என்ற தனிவகுப்பு நடத்தக்கூடாது. அதற்கு பதிலாக, காலை, மாலை நேரத்தில், சிறப்பு வகுப்புகள் பள்ளியிலேயே நடத்த வேண்டும். அதற்கு பள்ளிக் கல்வித்துறை தயாரித்துள்ள சிறப்பு வினா-விடை புத்தகத்தை பயன்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும்.

காலாண்டு தேர்வில் மதிப்பெண் தவறிய மாணவர்களை தனியாக சிறப்பு கவனம் செலுத்தி முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.


No comments:

Post a Comment