உதவித் தொகை திட்டங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு




 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.





         நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 99 பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாகவும், பகுதி அளவிலும் பணம் கையாடல்
 செய்யப்பட்டுள்ளது.இந்தப் பிரச்னை தொடர்பாக, 77 தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்னை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தனித்தனியே சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.



       அதன் விவரம்: ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு துறையின் மூலமாக ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.1,850-வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாடல் செய்தது தெரியவருகிறது. அறிக்கை அனுப்புங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


        இந்தத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவது தொடர்பாக உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதன்பின், தங்களது முழுமையான அறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வின் மீது அதிரடி நடவடிக்கை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை கிடைத்த பிறகு, மாவட்டவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment