கல்வி கட்டணம் செலுத்தாமல் மாணவர்களை சேர்க்கக்கோரி மனு-05-09-2012



சென்னை: கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தாமல், தொழிற் கல்லூரிகளில் முதல் தலைமுறை மாணவர்களை சேர்க்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, "வெளிச்சம்" என்கிற அமைப்பின் தலைவர் செரின் ஆஷா என்பவர் தாக்கல் செய்த மனு: ஒரு குடும்பத்தில் பட்டதாரி, டிப்ளமா முடித்தவர்கள் யாரும் இல்லையென்றால், அந்த குடும்பத்தில் இருந்து, முதன் முதலாக தொழிற் கல்லூரியில் சேரும் மாணவருக்கான கல்விக் கட்டணத்தை, அரசு செலுத்தும் என, 2010ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தாமல், மாணவர்களை சேர்க்க முடியாது என, சில பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் மறுக்கின்றன.
கல்லூரியில் சேர்ந்து மூன்று வாரங்களுக்குள் கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்த வேண்டும் என, முதல் தலைமுறை மாணவர்களிடம், அந்தக் கல்லூரிகள் வற்புறுத்துகின்றன. இந்தக் கல்லூரிகளின் நடவடிக்கையானது, அரசாணையின் நோக்கத்துக்கு முரணாக உள்ளது. கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதால், படிப்பை விட வேண்டிய சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, முதல் தலைமுறை மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என, தொழிற் கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
செரின் ஆஷா தாக்கல் செய்த மற்றொரு மனுவில், "ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், முதலில் அந்தக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டும். பின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அரசு அந்தக் கட்டணத்தை வழங்கும். அதையடுத்து, மாணவர்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும்.
கல்லூரியில் சேர்வதற்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மாணவர்கள் உள்ளனர். இதனால், உயர் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள ஏழு மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும். அவர்களால் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்காமல், அவர்களை கல்லூரிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்கள், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment