"துறை ரீதியான விசாரணை அடிப்படையில்
ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது'


"லஞ்ச புகாருக்கு ஆளான அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதனடிப்படையில், அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

குடி தண்ணீர் இணைப்பு தர, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, டில்லியைச் சேர்ந்த, குடிநீர் வாரிய பொறியாளர் ஒருவர் மீது, வழக்கு தொடரப்பட்டது; இந்த லஞ்ச புகார் தொடர்பாக, துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், அவர் குற்றமற்றவர் என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அந்தப் பொறியாளர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "லஞ்சம் வாங்கியதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, துறை ரீதியான விசாரணை நடந்தது. அதில், என் மீது, எந்த தவறும் இல்லை என, கூறப்பட்டுள்ளது. எனவே, என் மீதான லஞ்ச வழக்கை, ரத்து செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார். 

இந்த மனுவை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான, "பெஞ்ச்' விசாரித்து தீர்ப்பளித்தது; தீர்ப்பில் கூறப்பட்ட தாவது:லஞ்ச புகாருக்கு ஆளான, அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை, "குற்றமற்றவர்' என, கூறினாலும், அதை காரணமாக வைத்து, ஊழல் வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க முடியாது; அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment