பார்வை பறிபோன மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

08-09-2012

 வகுப்பறையில் சக மாணவன் பிரம்பை வீசியதால், மற்றொரு மாணவனின் கண்ணில் பட்டு, பார்வை பறிபோன வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் இந்து மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சீனிவாசன் என்கிற மாணவன், ஒன்பதாம் வகுப்பு படித்தான். உணவு இடைவேளையின் போது, வகுப்பு ஆசிரியர் வைத்துச் சென்ற பிரம்பை எடுத்து, ஒரு மாணவன் வீசியுள்ளான். அப்போது, வகுப்பறைக்குள் வந்த சீனிவாசனின் கண்ணில், பிரம்பு பட்டது.உடனே, பள்ளி ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாலையில் தான், சீனிவாசனின் தந்தைக்கு, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மகனை, வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தார். இடது கண், பார்வையை இழந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசில் அளித்த புகார், பதிவு செய்யப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாணவன், விடுதலையானான். சம்பவத்துக்கு காரணம், பள்ளி தான்; மாணவர்களைப் பாதுகாக்க, ஆசிரியர்கள் அக்கறை எடுக்கவில்லை; எனவே, 10 லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என சீனிவாசனின் தந்தை செல்வம், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு: வகுப்பு ஆசிரியரின் அஜாக்கிரதையால் தான், இச்சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் பிரம்பை அவர் விட்டுச் சென்றுள்ளார். எனவே, பள்ளி நிர்வாகம் தான், நஷ்டஈட்டை வழங்க வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈட்டை, இரண்டு மாதங்களுக்குள், இந்து மேல்நிலைப் பள்ளி வழங்க உத்தரவிடப்படுகிறது.
மாணவர்களிடம் இருந்து, கல்வி நிறுவனங்கள், கட்டணம் வசூலிக்கின்றன. அந்த மாணவர்களை கவனிக்க வேண்டிய கடமையும், நிர்வாகத்துக்கு உள்ளது. பள்ளியில் மாணவர்கள் இருக்கும் போது, அவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அந்த கல்வி நிறுவனத்துக்கு உள்ளது.
பள்ளிக்கு வந்தது முதல், அங்கிருந்து புறப்படும் வரை, அந்த மாணவனின் மீது, பள்ளி நிர்வாகத்துக்கு பொறுப்பு உள்ளது. தங்கள் குழந்தைகள் பள்ளியில் பாதுகாப்பாக இருப்பர் என்கிற நம்பிக்கையில் தான், குழந்தைகளை பள்ளியில் விட்டுச் செல்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை, கல்வி நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதி கே.கே.சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment