ஆன்லைன் மூலம் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் தமிழக கல்வித்துறை வரலாற்றில் புதிய மைல் கல்.
தூத்துக்குடியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் சென்னை பள்ளிக்கல்வித்துறை மூலம் நேற்று (15.09.2012)ஆன்லைனில் நடந்தது. இதில் இடங்களை தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ ராமச்சந்திரன் ஆர்டரை வழங்கினார். 



தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் எடுப்பதற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2010-2011ம் ஆண்டில் இந்த ஆசிரியர்கள் சீனியார்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எல்லாம் முழுமையாக முடிந்த நிலையில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு பல்வேறு சூழ்நிலை காரணமாக பணியிடம் வழங்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.தற்போது இவர்களுக்கு பணியிடம் வழங்குவதற்காக கவுன்சிலிங் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆன்லைன் மூலம் முதல், முதலாக அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதில் பணியிடம் கிடைக்காதவர்கள் திருச்சியில் இன்று நடக்கும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
 
மாவட்ட கல்வி அதிகாரிகள் கிளாடிஸ் டெல்மா, ராஜமாணிக்கம், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி (பொ) பெருமாள்சாமி, சி.இ.ஓ நேர்முக உதவியாளர் குமாரதாஸ், பள்ளித்துணை ஆய்வர் சங்கரய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18 முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்கள் இருந்தன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளான சாமுவேல்புரம், பூதலாபுரம், கீழப்பூவாணி, சிவகளை, ஊத்துப்பட்டி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தங்கம்மாள்புரம், ஓட்டப்பிடாரம், கீழப்பூவாணி, சோரீஸ்புரம், திருச்செந்தூர் ஆண்கள், முக்காணி ஆகிய பள்ளிகளில் காமர்ஸ், எக்னாமிஸ், ஆங்கிலம், வரலாறு, தமிழ், விலங்கியல் பிசிக்கல் டைரக்டர் ஆகிய பாடங்களுக்கு 18 காலியிடங்கள் இருந்தன.

மொத்தம் 25 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர் ஆப்சென்ட் ஆன நிலையில் 23 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆன்லைன் மூலம் சீனியார்டி அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டன.ஒவ்வொரு ஆசிரியராக அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் இடம் கேட்டு அதன் அடிப்படையில் அவர்கள் விருப்பத்தின் பேரில் ஆர்டர் வழங்கப்பட்டது. பணி நியமன உத்தரவினை சி.இ.ஓ ராமச்சந்திரன் வழங்கினார்.
நாளை (17ம் தேதி) இவர்களுக்கு சி.வ பள்ளியில் வைத்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டு அன்றே அவர்கள் பள்ளியில் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக காலியிடங்கள் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் சி.வ பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.ஆசிரியர்களுக்கு எப்படி பள்ளிகளில் பணியாற்ற வேண்டும். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஒரு நாள் பயிற்சியில் சி.இ.ஓ மற்றும் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.அதன் பிறகு ஏற்கனவே பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வருகைப்பதிவேட்டுடன் அங்கு வந்திருப்பதால் அதில் நாளையே அவர்கள் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்துவிடுவர். இவர்களின் வசதிக்காக அரசு டாக்டர்களும் நாளை பயிற்சி நடக்கும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆர்டர் பெற்றுள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றினையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் இவர்கள் தங்களுக்கு பணி நியமனம் கிடைத்த பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர் பணியினை மேற்கொள்வார்கள் என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தாலும் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடந்து, பணி நியமனம் பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் வருகைப்பதிவேட்டுடன் வந்து அவர்களிடம் கையெழுத்து பெறுவதும், டாக்டர்கள் நேரடியாக வந்து அவர்களுக்கு மருத்துவச்சான்று வழங்குவதும் தமிழக கல்வித்துறை வரலாற்றில் புதிய முறை என்று பரபரப்பாக பேசப்படுகிறது. தூத்துக்குடியில் ஆன்லைன் மூலம் நடந்த கவுன்சிலிங்கில் முதல் ஆர்டர் உடற்கல்வி இயக்குனராக திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்த வசந்தாவிற்கு கிடைத்தது.

No comments:

Post a Comment