ஜூன் மாதம் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்.


கோவை: வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய போட்டோக்களை மாற்ற ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

 கடந்த ஜனவரி மாதம் வெளியான வாக்காளர் இறுதி பட்டியலின்படி, மாநில அளவில் 5 கோடி யே 4 லட்சத்து 61 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 22,07,364 புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இதுவரை 21,98,936 பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மாநில அளவில், 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர்.ஆனால், அடையாள அட்டையில் பல்வேறு குளறுபடி நீடிக்கிறது. சில அடையாள அட்டைகள் பழைய முகவரியில் இருக்கிறது. ஆண், பெண் புகைப்படம் மாறியிருப்பதும், பெயர், முகவரியில் பிழை இருப்பதும் அதிகமாக இருக்கிறது. கடந்த 1995ம் ஆண்டில் வாக்காளர் அடையாள அட்டை முதல் முறையாக வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட அடையாள அட்டையை பல வாக்காளர்கள் இன்னும் வைத்துள்ளனர். 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இளம் வயதில் எடுத்த போட்டோக்களை முதுமை அடைந்தும் மாற்றம் செய்யாமல் வைத்துள்ளனர்.இதனால் அடையாள அட்டையை வைத்து வாக்காளர்களை அடையாளம் காண்பது இயலாத காரியமாக இருக்கிறது. எனவே அடையாள அட்டையில் உள்ள போட்டோக்களை மாற்றும் வகையில் தனி சாப்ட்வேர் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் மாநில அளவில் பழைய போட்டோக்களை அகற்றி விட்டு புதிய போட்டோக்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment