கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் 18,946 மாணவர்களுக்குச் சேர்க்கை.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 18,946 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள ஒதுக்கீட்டு இடங்களில் இது ஏறத்தாழ 30 சதவீதம் ஆகும். ஏழைகளுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பில் மொத்தம் 59 ஆயிரத்து 292 இடங்கள் தமிழகத்தில் உள்ளன; இதில் 40,512 இடங்கள் நிரம்பவில்லை.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. உள்ளிட்ட அறிமுக வகுப்புகளில் ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு மே 2-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை, விண்ணப்பங்களும் வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், பெற்றோர்கள் இந்த அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து 12 ஆயிரம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கூடுதலாக சேர்ந்துள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை வரும் செப்டம்பர் மாதம் அரசே பள்ளிகளுக்கு வழங்கும் எனத் தெரிகிறது.
கோவையில் அதிகம்: கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,163 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 53 பேரும் இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். 3,860 பள்ளிகள்: தமிழகத்தில் மொத்தம் 3,860 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையின அந்தஸ்து பெற்ற 292 பள்ளிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 32 பள்ளிகள் செயல்படாத பள்ளிகளாக உள்ளன.
இதையடுத்து, 3,627 பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
59 ஆயிரத்து 292 இடங்கள்: இந்தப் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் மொத்தமுள்ள இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 356 ஆகும். இதில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 59 ஆயிரத்து 292 இடங்கள் உள்ளன.
இந்த ஒதுக்கீட்டில் சேருவதற்காக 32 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. அதில் 26 ஆயிரம் பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
இதில் 119 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட மொத்தம் 2,620 பள்ளிகளில் 18,780 மாணவ, மாணவியர் இந்த ஆண்டு எல்.கே.ஜி. வகுப்புகளில் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,012 பள்ளிகள் இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்கவில்லை. 1,593 மாணவர்களின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரித்துள்ளன. ஆறாம் வகுப்பில் சேர மொத்தம் 172 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 166 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேர்க்கை கிடைத்துள்ளது.
போதுமான விழிப்புணர்வு இல்லை: இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். பெரும்பாலான பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையே சரியாக நடைபெறவில்லை, பல பள்ளிகள் இந்த சேர்க்கைக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என புகார்கள் எழுந்தன. அதன் பிறகே, இதில் அரசு நடவடிக்கை எடுத்தது. வரும் கல்வியாண்டில் இருந்து இந்த மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்த பெற்றோருக்கு முன்கூட்டியே தெரியும் வகையில் போதிய விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும். பள்ளிகளிலும் இதுதொடர்பான அறிவிப்புகளை வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment