அப்பீல் மனு முடியும் வரை காத்து இருக்கக் கூடாது; குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி ரத்து - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


குற்ற வழக்கில் தண்டனை பெற்ற உடனேயே எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை ரத்து செய்யலாம் என்றும், ஏற்கனவே அப்பீல் செய்தவர்களுக்கு இது பொருந்தாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை அளித்து இருக்கிறது.

அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால் தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள்கூட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளாக பதவியில் தொடருகிற நிலை உள்ளது.
பாதுகாப்பு அளிக்கும் பிரிவு
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), அரசியல்வாதிகள் கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகளோ, அதற்கு மேலோ தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் மேல்–முறையீடு செய்யும் அவகாசம் (90 நாட்கள்) முடியும் வரையிலோ அல்லது மேல்–முறையீடு செய்தால் அதன் இறுதி தீர்ப்பு வரும் வரையிலோ பதவியில் தொடர வழிவகுத்து தந்துள்ளது. இதை பயன்படுத்தித்தான் அரசியல்வாதிகள் பதவியில் தொடருகின்றனர்.
பொது நல வழக்கு
இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் லில்லி தாமஸ் என்பவரும், லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக அதன் செயலாளர் எஸ்.என்.சுக்லாவும் பொது நல வழக்குகளை தொடுத்தனர்.
அந்த வழக்குகளில் அவர்கள் கூறி இருப்பதாவது:– தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளிகள், தங்களது மேல்–முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் பதவியில் தொடர மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு அனுமதிக்கிறது. இது அரசியலில் குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
மேலும், அது அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மாறாக அமைந்துள்ளது. எனவே இப்படி கிரிமினல் அரசியல்வாதிகள் பதவியில் தொடர்வதற்கு வழிவகுக்கிற மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவினை நீக்கவேண்டும். இவ்வாறு வழக்கில் முறையிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பு
இந்த நிலையில் லில்லி தாமஸ், சுக்லா தொடர்ந்துள்ள பொது நல வழக்குகளை நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே.முகோபாத்யா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, எந்தவொரு எம்.பி., எம்.எல்.ஏ.யும் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட நாளிலேயே அவர்கள் பதவியை இழந்து விடுவார்கள் என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:–
* இந்த தீர்ப்பு, ஏற்கனவே தண்டிக்கப்பட்டு மேல்–முறையீடு செய்து அவை நிலுவையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது.
சட்டப்பிரிவு செல்லாது
* மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4), அரசியல் சட்டத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. அது செல்லாது.
* தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே, பதவி இழப்பு தாமாகவே வந்துவிடும்.
* சிறையில் இருந்து கொண்டு ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, அரசியல்வாதிகளுக்கு பெருத்த தலைவலியாக அமைந்துள்ளது. கிரிமினல் குற்றச்சாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தற்போது, ஊடகத்தகவல்களின்படி, நாட்டில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 835 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில், 1448 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
543 எம்.பி.க்களில், 162 பேருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. அவர்களில் 75 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொள்ளை உள்ளிட்ட மிகக்கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் கருத்து
சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கபில் சிபல், பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரிடம் கருத்து கேட்டபோது, ‘‘அவர்கள் இது பரந்த சட்ட உட்பொருட்களைக் கொண்டிருப்பதால், தீர்ப்பை முழுவதுமாக படித்த பின்னரே கருத்து கூற முடியும்’’ என கூறி விட்டனர்.
இந்த தீர்ப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு அரசு சார்பில் கோரப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிப்பதையும் கபில் சிபல் தவிர்த்து விட்டார்.
இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா எம்.பி., ‘‘இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் எவ்வாறு கையாளப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என கூறினார்.
Hot Topic Icon : 

No comments:

Post a Comment