பசுமை பள்ளி உருவாக்குவது எப்படி? தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி.

திருச்சி: பள்ளி மற்றும் சுற்றுப்புற தூய்மை, பசுமை பள்ளிகளை உருவாக்குவதற்கான வழிமுறை குறித்து, திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.
பள்ளிக்கூடங்களில், மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியுடன் கூடிய சமூக பொறுப்புணர்வை, ஆசிரியர்கள் கற்று தர வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பசுமை புரட்சி, செஞ்சிலுவை சங்கம், மாணவர் படை போன்ற இயக்கங்கள் மூலம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதை சிறப்புடன் செயல்படுத்தவும், பசுமை பள்ளிகளை உருவாக்க வேண்டுமெனவும், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுடன், கமிஷனர் தண்டபாணி தலைமையில், ஒருநாள் ஆலோசனை கூட்டம், நேற்று, தேவர் அரங்கில் நடந்தது.இதில், மழைநீர் சேமிப்பு, பசுமை பள்ளி உருவாக்குதல், குப்பை தரம் பிரித்தல், டெங்கு ஒழிப்பு, கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட தலைப்புகளில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மழைநீர் சேமிப்பு:. கூரை, கான்கிரீட் வீடுகள் மற்றும் பொது இடங்களில், மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கான வழிமுறைகளை, மாதிரி படங்களுடன் ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. பழமை வாய்ந்த நீராதாரங்களான அணை, ஏரி மற்றும் கோவில் குளங்களை பராமரிக்கும் வழிமுறைகளும் விளக்கப்பட்டன. மழைக்காலம் வருவதற்கு முன், மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை, சுத்தம் செய்வதற்கான முறைகளும் எடுத்து கூறப்பட்டது.டெங்கு ஒழிக்க: டெங்கு நோயை பரப்பும் "ஈடிஸ்' கொசு உற்பத்தியாகும் இடங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை குறித்து, ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:


நிலத்தடி நீரை உயர்த்த, மழைநீரை சேமிப்பது அவசியம். வறட்சி காலங்களில் கூட, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளே கைக்கொடுத்தன. மழைநீர் சேமிப்பு திட்டத்தை, மக்கள் இயக்கமாக்குவதில், மாநகராட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இதில், பள்ளி மாணவர்கள் மூலம், மழைநீர் பயன்பாட்டை விளக்கவும், சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.மாணவர்களுக்கு புரியும் விதத்தில், ஆசிரியர்கள் விளக்குவதற்காக, மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மாதிரிகளை, மாநகராட்சி அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கியுள்ளது. இதை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பர்.
மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணி மாநகராட்சியில் செம்மையாக நடந்து வருகிறது. இதை, மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.பள்ளி மற்றும் சுற்றுபுற தூய்மை, கழிவறைகளை பராமரித்தல், மழைகாலத்தில் பரவும் நோய், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்குவதுடன், விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி, மாணவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கும் தெரிவிக்க வழிவகை செய்யப்படும்.
 மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் குறித்து, மாணவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.முகாமில், பங்கு பெற்ற தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு, பசுமை பள்ளி அமைக்க வழிநடத்துவர். பசுமை பள்ளிகளை உருவாக்க, தேவையான அனைத்து உதவிகளும், மாநகராட்சி சார்பில் செய்து தரப்படும்.  இவ்வாறு கமிஷனர் தண்டபாணி பேசினார்.
பயிற்சி வகுப்பில், நகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர்கள் தயாநிதி, ரெங்கராஜன், ராஜம்மாள் மற்றும் தனபாலன், நகர்நல அலுவலர் அல்லி, உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment