மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி.
Jan.18.
மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 2006-ஆம் ஆண்டில் ஆயிரத்து 880 நிரந்தர கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் அரசால் உருவாக்கப்பட்டன. இந்த பணியிடங்களில் சேர 1999-2000-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த தாற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 50 சதவீத மதிப்பெண் பெற்றால் பணி நிரந்தரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தாற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தகுதித் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும், 35 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது.
அதன்படி, கடந்த 2010 ஜனவரி 24-ஆம் தேதி சிறப்பு தகுதித் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் பல தவறான கேள்விகள் இடம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த சென்னை ஐ.ஐ.டி. குழு, 150 கேள்விகளில் 20 கேள்விகள் தவறானவை என அறிக்கை சமர்பித்தது.
இந்த அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், தவறான 20 கேள்விகளை நீக்கிவிட்டு மீதமுள்ள கேள்விகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து, தவறான 20 கேள்விகளுக்கு விடை அளித்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அல்லது மறு தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பலர் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.எச்.அரவிந்த் பாண்டியன் மறு தகுதித் தேர்வு நடத்தக் கூடாது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. எனவே, மீண்டும் அனைத்து அம்சங்களையும் விவாதிக்க முடியாது எனக் கூறி மறு தகுதித் தேர்வு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment