தமிழ் பேச்சுத்திறனில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்: கல்வி அமைச்சர் வேதனை.

Jan. 7.
தமிழ் பேச்சு மற்றும் எழுத்துத் திறனில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பது வேதனைக்குரியது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
மதுரை மண்டல அளவிலான கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் பேசியது:

தமிழகத்திலுள்ள அனைத்துப் அரசு பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் திட்டங்களுக்கும், ஏற்கனவே உள்ள திட்டங்கள் பராமரிப்புக்கும் அந்தந்தப் பகுதி எம்பி, எம்எல்ஏக்கள், ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அணுகி ஏற்பாடு செய்து கொள்ளலாம். மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை என்ற காரணத்துக்காக ஒன்றிரண்டு பள்ளிகளை மூடியிருப்பது தவறு. இது தொடர்பான விவரங்களை அரசுக்கு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து, அந்தப் பள்ளியை முடிந்தளவு மீண்டும் செயல்படச் செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல், அந்தப்பள்ளி மீது அரசு மூலம் தான் உரிய முடிவை எடுக்க வேண்டும். புதிய பள்ளிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் சுயமாக எடுக்கக் கூடாது.
அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு அந்தந்தப் பகுதி கல்வித்துறை அதிகாரிகள் தாமதமின்றி நோட்டீஸ்களை விநியோகித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க யோசிக்கக் கூடாது.
அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறன் குறைந்திருப்பது வேதனைக்குரியது. இப்படிப்பட்ட மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். தழிழ் நாளிதழ்களை மாணவர்கள் படித்தாலே வாசிப்புத்திறன் நன்றாக வளரும். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
அனைவருக்கும் கல்வித்திட்ட இயக்குநர் பூஜை குல்கர்னி பேசியது:
மண்டல அளவிலான ஆய்வில் பெரும்பாலான மாவட்டங்களில் பல அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தமிழில் வாசிப்புத்திறன் மற்றும் எழுத்துத்திறன் குறைந்திருப்பது ஏற்புடையதல்ல. கல்விóத்துறை அதிகாரிகள், உதவிக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுதத வேண்டும், என்றார்.
பள்ளிக்கல்விததுறை முதன்மைச் செயலர் சபீதா பேசியது:
பல அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறன் 20 சதவீதம், 30 சதவீதம் என்றிருப்பது வேதனைக்குரியது. கணக்குப் பாடத்தில் அடிப்படையான கூட்டல் கழித்தல் கூட தெரியாமலும், அறிவியல் பாடத்தை படிக்க முடியாமலும் இந்த மாணவர்கள் இருப்பதால் பயனில்லை. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எந்த வகையில் எதிர்கொள்வர். எனவே, சிஇஓ, மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக்கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வித்திட்ட சிஇஓ, உதவி தொடக்ககல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, தமிழில் வாசிப்புத்திறனை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment