புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் பேட்டி.

   Jan.2
நெல்லை
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் துளசிராமன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பென்சன் திட்டம்
2004–ம் ஆண்டுக்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்படும் புதிய பென்சன் திட்டமான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். தொழில் வரியை ரத்து செய்யவேண்டும். 6–வது ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அலுவலர்களுக்கு என்று மாநில ஊதியக்குழு அமைக்க வேண்டும். தொகுப்பூதியம், தினக்கூலியாகவும், பகுதி நேர ஊழியர்களாகவும் வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் மற்றும் நிரந்தர பென்சன் வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசுத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதி
தமிழக அரசில் பணிபுரியும் ஆசிரியர்–அலுவலர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பென்சன்தாரர்களுக்கு கம்யூடேசன் தொகை 40 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநகராட்சி, உள்ளாட்சித்துறை பணியாளர்களை அரசு அலுவலர்களாக கருதி உத்தரவிடவேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை எனில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment