பிடித்தமான பதவியை தேர்வு செய்யும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகம் டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை நடத்துகிறது.

சென்னை
பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

131 காலி இடங்கள்
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகளில் 131 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப்–1 மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை ஏறத்தாழ 2,620 பேர் எழுதினார்கள்.
இந்த நிலையில், மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 262 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வு கடந்த 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்தது.
முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகம்
இதைத்தொடர்ந்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்களின் மதிப்பெண் விவரம் (எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு) 5–ந்தேதி இரவு வெளியிடப்பட்டது. அதன்பிறகு 131 பேர் கொண்ட இறுதி தேர்வுபட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 7–ந் தேதி வெளியிட்டது. வழக்கமாக, தேர்வர்களின் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி தேர்வு பட்டியலின் போது வெளியிடப்பட்டு விடும்.
ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கு கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, தேர்வர்கள் மெரிட் அடிப்படையில் கவுன்சிலிங் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை (காலியாக இருக்கும் பட்சத்தில்) தேர்வு செய்து கொள்ளலாம்.
விரும்பும் பதவியை தேர்வு செய்யலாம்
‘‘எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காக குரூப்–1 தேர்விலும் கவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். பழைய முறையில் தேர்வர்கள் விரும்பாத பதவியோ, அல்லது அவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பதவியோ ஒதுக்கப்பட்டிருக்கக்கூடும். தற்போது கவுன்சிலிங் நடத்துவதால் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்வு செய்து திருப்தியாக பணியை மேற்கொள்ளலாம்’’ என்று டி.என்.பி,எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் ‘தினத்தந்தி’ நிருபரிடம் நேற்று தெரிவித்தார்.
குரூப்–1 பணி ஒதுக்கீட்டிற்காக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 131 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே, இந்த ஆண்டு குரூப்–1 பணிகளில் 25 காலி இடங்களை நிரப்புவதற்காக முதல் நிலைத்தேர்வு 16–ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.

No comments:

Post a Comment