சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பச்சைகுமாச்சி மலை.


தேனி மாவட்டத்தில், சின்னமனூர் அருகில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சைகுமாச்சி மலை.

இந்த மலையில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலார் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன.
கொஞ்சி விளையாடும் மேகக் கூட்டங்கள், அருவிகள், அணைக்கட்டுகள், பச்சைப் பட்டு உடுத்தியது போல பரவிக் கிடக்கும் தேயிலை, காபித் தோட்டங்கள், புல்வெளிகள், யானைக் கூட்டம் ஆகியவை இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கின்றன. இதனால் தற்போது ஹைவேவிஸிற்கு வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேனியிலிருந்து 23 கி.மீ. தூரம் உள்ள சின்னமனூருக்குச் சென்று அங்கிருந்து 40 கி.மீ. தூரம் ஹைவேவிஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். ஹைவேவிஸ் சாலையைப் பராமரிக்க முடியாமல், எஸ்டேட் நிர்வாகங்கள் தற்போது அரசிடம் ஒப்படைக்க முன்வந்துள்ளன. ஹைவேவிஸ் மலையை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சியில் கரடு முரடான நிலையில் உள்ள சாலைக்கான இடத்தை கையகப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
சின்னமனூரில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஹைவேவிஸிற்கு 3 பஸ்கள் இயக்கப்பட்டாலும், அங்கிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு வாய்ப்பாகவும், காலதாமதம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் தனியார் வாகனங்களில் சென்று வருவது வசதியாக இருக்கும்.
சின்னமனூர்-ஹைவேவிஸ் சாலையில் 13 கி.மீ. தொலைவில் மலை அடிவாரத்தில் தென்பழனி முருகன் கோயில் உள்ளது. மாலை நேரங்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியின் இயற்கைச் சூழலும், உலாவரும் மயில்களின் கூட்டமும் பார்வையாளர்களுக்கு பரவசத்தைத் தரும். ஹைவேஸ் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் இருந்து கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கிராமங்கள், சின்னச்சுருளி அருவி, பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள் ஆகியவற்றின் எழில்மிகு தோற்றங்களைக் காணலாம்.
ஹைவேவிஸ்ஸில் பசுமை பரவிக்கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து மணலாறு ஏரியின் தோற்றத்தைக் கண்டு ரசிக்கலாம். மலை முகடுகளுக்கு மத்தியில் ஹைவேவிஸ் அணை உள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மேல்மணலாறு வழியாக இரவங்கலாறு அணைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. ஹைவேவிஸ்ஸில் இருந்து 6 கி.மீ. தொலைவில் மேல்மணலாறு பகுதியில் வட்டப்பாறை என்ற இடம் உள்ளது. இங்கிருந்து வன விலங்கு கூட்டங்களை கண்டு களிக்கலாம். இதற்கு அருகில் வெண்ணியாறு அணை, எக்கோ பாயின்ட் ஆகிய இடங்கள் உள்ளன.
ஹைவேவிஸ்ஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இரவங்கலாறு அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகளில் இருந்து இரவங்கலாறு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுருளி மின் உற்பத்தித் திட்டத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இரவங்கலாறு அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இந்த அருவியில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர்வரத்து இருக்கும்.
இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் யானை, காட்டெருமை, பல வகையான மான் இனக் கூட்டம் தண்ணீர் அருந்திச் செல்லும் அழகைக் கண்டு ரசிக்கலாம். இந்த இடம் முல்லையாறு வன விலங்குகளின் புகலிடமாகத் திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளின் கண்கவர் தோற்றம், கேரள வனப்பகுதிகள் ஆகியவற்றையும் இங்கிருந்து காணலாம்.
ஹைவேவிஸ் பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள முல்லையாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழி மூலம் இந்த இடத்தின் தொன்மைச் சிறப்பு தெரியவருகிறது. "மதிகெட்டான் சோலை' என்று அழைக்கப்படும் வனப்பகுதியும் இங்குதான் உள்ளது.
 மகாராஜாமெட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள மகராசியம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மதுரையிலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வழியில் கண்ணகி வந்து தங்கியிருந்த இடமே தற்போது கண்ணகி கோட்டம் என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் இயற்கை எழில் தோற்றத்தைக் காணலாம்.
ஹைவேவிஸ்ஸில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பயணியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 18 அறைகள் உள்ளன. தனியார் விடுதிகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான உணவகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகம் தொலைபேசி எண்: 04554- 232225, கொடைக்கானல் சுற்றுலா அலுவலகம் தொலைபேசி எண்: 04542- 241675 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment