‘‘கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல’’ விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வில்(‘ஸ்லெட்‘) கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல என்று கூறி, தகுதித்தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி.மாங்காடு அருகே உள்ள வாவறை பகுதியை சேர்ந்தவர் சோபியா(வயது 27). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியில் சேர பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட், ஸ்லெட் போன்ற தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மாநில அளவில் நடத்தப்படும் இந்த தகுதித்தேர்வை(ஸ்லெட்) கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த தேர்வில் மொத்தம் 3 பேப்பர்கள் உள்ளது. ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு பேப்பரிலும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.
தேர்வு பட்டியல்
பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி பொதுப்பிரிவினர் முதலாவது, 2–வது பேப்பரில் 40 சதவீத மதிப்பெண்ணும், 3–வது பேப்பரில் 50 சதவீத மதிப்பெண்ணும் பெற வேண்டும். நான், முதலாவது பேப்பரில் 52 சதவீத மதிப்பெண்ணும், 2–வது பேப்பரில் 56 சதவீத மதிப்பெண்ணும், 3–வது பேப்பரில் 50.04 சதவீத மதிப்பெண்ணும் பெற்றேன். இதனால் எனது பெயர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
இந்த நிலையில் 9.2.2013 அன்று தேர்வானவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், எனது பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தேர்வு கமிட்டியிடம் கேட்ட போது, ஒவ்வொரு பேப்பரிலும் தனித்தனியாக குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்ணை பெற்று இருந்தாலும் கூட 3 பேப்பர்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 190 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விதிகளுக்கு புறம்பாக...
நான், 3 பேப்பர்களையும் சேர்த்து குறைந்தபட்ச மதிப்பெண்ணான 190 மதிப்பெண் பெறாததால் எனது பெயர் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கட்–ஆப் மதிப்பெண் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநில அளவில் தேர்வு நடத்தும் கமிட்டி, பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு புறம்பாக கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்து இருப்பது சட்டவிரோதம்.
ரத்து செய்ய வேண்டும்
எனவே, கட்–ஆப் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவிக்கவும், அதன் அடிப்படையில் என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.சத்தியமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், ‘ஸ்லெட்‘ தேர்வு கமிட்டி செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment