தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா?
மதுரை: தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு முடிவை வெளியிட தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன், அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநாயர், உறுப்பினர் செயலர்கள் அறிவொளி, தங்கம்மாள் ஆகியோரும் ஆஜராகினர்.அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில், Ôபி பிரிவு கேள்வித்தாளில் 150 கேள்விகளில் 40 கேள்விகளில் பிழை இருந்துள்ளது. இந்த 40 கேள்விகளையும் கேள்வித்தாளிலிருந்து நீக்கிவிடுகிறோம். எஞ்சிய 110 கேள்விகளை மட்டும் கணக்கில் எடுத்து, தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, மூன்றில் ஒரு பங்கு கேள்விகளில் தவறு இருந்துள்ளது. போட்டித் தேர்வுகளில் ஓரிரு கேள்விகளில் தவறு இருந்தால் முழு மதிப்பெண் வழங்க வேண்டும், அதிக கேள்விகளில் தவறு இருந்தால் மறு தேர்வு நடத்த வேண்டும் என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் தேர்வில் பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்தது கண்டிக்கத்தக்கது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். தமிழ் ஆசிரியர் தேர்வை 8 ஆயிரத்து 2 பேர் எழுதியுள்ளனர். சாதாரண மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். இந்த வழக்கு போட்டவரை போல், பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். அதற்கு தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மறு தேர்வு நடத்த வேண்டும்Õ என்றார்.மறு தேர்வு நடத்துவது தொடர்பாக அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.இதனையடுத்து, விசாரணையை செப். 24க்கு தள்ளிவைத்து, அன்று மறு தேர்வு தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment