ரயில்வே போலீஸ் நிலையங்களில் இணையதளம் மூலம் புகார் செய்யலாம்.

சென்னை: இணையதளம் மூலம், ரயில்வே போலீஸ் நிலையங்களில் புகார் பதிவு செய்யும் வசதி, நாட்டிலேயே முதல் முறையாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வசதியை துவங்கி வைத்து, ரயில்வே ஏ.டி.ஜி.பி., சேகர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க இணையதள தொடர்பு வசதி (சி.சி.டி.என்.எஸ்.,) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க, இப்புதிய வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ரயில்வே போலீஸ் நிலையத்தில், நாட்டிலேயே இவ்வசதி, சென்னை, சென்ட்ரலில் தான் முதல் முதலாக அறிமுகம் செய்யப்படுகிறது. போலீஸ் நிலையங்களில் பதிவான மற்றும் பதிவு செய்யப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும், கம்ப்யூட்டரில் இடம் பெறும். 
இப்பதிவுகளை உயர் அதிகாரிகள், இருக்கும் இடங்களிலிருந்தே, நேரடியாக கண்காணிக்கலாம். குற்றவாளிகள் மற்றும் அவர்களை பற்றிய விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை விரைவாக எடுக்க இப்புதிய வசதி உதவியாக இருக்கும்.
பயணிகள் இணையதளம் மூலம் புகார் பதிவு செய்ய லாம். விசாரணை விவரத்தையும் இணையதளம் மூலம் மனுதாரர் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில், சென்னை, திருச்சி ரயில்வே மாவட்டங்களில், 34 ரயில்வே போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில், ராமநாதபுரம் நிலையத்தை தவிர, மற்ற நிலையங்களில் இப்புதிய வசதி அறிமுகம் செய்யப்படும். இந்த வசதியில், கடந்த, 2002ல் இருந்து பதிவான வழக்குகள், குற்றவாளிகளின் படங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு நிலையங்களிலும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' மூன்று பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால், வழக்கு பதிவுகளில் தாமதம் ஏற்படாது. தமிழகம் முழுவதும், 102 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். விழாவில், மாநில குற்றப் பதிவேடு மையத்தின் ஏ.டி.ஜி.பி., ஆஷிஸ் பங்கரா, ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி., பாஸ்கரன், எஸ்.பி., கயல்விழி, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பொன்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment