28 ஆயிரம் சத்துணவு பணியாளர் நியமனம் ரத்து 
செய்து ஐகோர்ட் அதிரடி.


மதுரை: அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனத்தில், அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான், பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது சட்டவிரோதம். இது, பிறரின் உரிமையை பறிக்கும் செயல். உள்ளூரை சேர்ந்த விண்ணப்பதாரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு செல்லாது. மாவட்ட வாரியாக தகுதி ஆனவர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். நியமனங்களை இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


மனு: மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் முத்துலட்சுமி தாக்கல் செய்த மனு: அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திற்கு, விண்ணப்பதாரர்கள் அதே கிராமம் அல்லது ஊராட்சியில் வசிக்க வேண்டும். திருமணமாகி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு இடத்திற்கு, ஒருவருக்கு மேல் போட்டியிருந்தால், வயது மூப்பு, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் அடிப்படையில் நியமிக்க வேண்டும். பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த நான், பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளேன். என்னை விட குறைந்த தகுதிஉள்ள சித்ராவை, விதிகளை மீறி பணி நியமனம் செய்துள்ளனர். அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் முதுகுளத்தூர், விருதுநகரைச் சேர்ந்த 29 பேர் தாக்கல் செய்த மனு: சத்துணவுத்திட்டத்தின் கீழ் உதவி சமையலர், சமையலர், அமைப்பாளர், சிறிய அங்கன்வாடி மையங்கள் என, 28 ஆயிரத்து 596 பணியிடங்கள் காலியாக இருப்பதாக, ஏப்., 30ல், அரசு அறிவித்தது. மையத்திலிருந்து 5 முதல் 10 கி.மீ.,க்குள் விண்ணப்பதாரர்கள் வசிக்க வேண்டும். "இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்' என, அறிவித்தனர். பின் மிகவும் பிற்பட்டோர்/ பிற்பட்டோருக்கு பணி இடத்தை ஒதுக்கியதாக தெரிவித்தனர். சிலருக்கு, நேர்முகத் தேர்விற்கு கடிதம் அனுப்பவில்லை. சிலருக்கு, வயது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிலரது விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சிலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி வினோத் கே.சர்மா உத்தரவு: இப்பணியில், வசிப்பிடத்தின் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தான், பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பது சட்டவிரோதம்; இது, பிறரின் உரிமையை பறிக்கும் செயல். இதன் மூலம் ரிசர்வ், பொதுப் பிரிவு இடமாக இருந்தாலும், எல்லாருக்கும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த 2010ல், 1:4 என்ற விகிதத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதே அரசு, ஏற்கனவே 2008ல், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடு: சிறுபான்மையினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் ஏற்கனவே பணிபுரிவோருக்கு, 25 சதவீதம் பதவி உயர்வு வழங்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். மனுக்களை தகுதிவாரியாக பிரிக்க வேண்டும். தேர்வுக்குழு அமைக்க வேண்டும். கூடுதல் தகுதிகள் உள்ளவர்களை நியமிக்க, இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு கிராமத்தில், இரண்டு பேருக்கு மேல் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களை அடுத்த கிராமத்தில் நியமிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும். இந்த நியமனங்களை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். "வசிப்பிடத்தின் அடிப்படையில், ஒருவருக்கு வேலை வழங்க முடியாது' என, சட்டப்படி எந்த அரசும் கூறமுடியாது. உள்ளூரை சேர்ந்த விண்ணப்பதாரர்களைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு செல்லாது. மனுக்கள் "பைசல்' செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment