ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் தீர்ப்பு: அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா மகனுடன் கைது.


புதுடெல்லி, ஜன. 16-

இந்திய லோக்தள் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரியாக இவர் பதவி வகித்தபோது 1999 - 2000 ஆண்டுக்கிடையிலான காலகட்டத்தில், சட்ட விரோதமாக 3,206 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த நியமனத்திற்காக ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அரசு அதிகாரிகள் 62 பேர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டி, டெல்லி நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடுத்தனர். இவர்களில் 6 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே இறந்து விட்டனர். ஒருவரை வழக்கிலிருந்து விடுவித்து சி.பி.ஜ. உத்தரவிட்டது.

பணியமர்த்தப்பட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக, ஆவணங்களை திருத்தி முறைகேடு செய்த வகையில் ரகசிய காப்பு பிரமாணத்தை ஓம் பிரகாஷ் சவுதாலா மீறியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அரசு அதிகாரிகள் 53 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதால், அவர்கள் 55 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க சிறப்பு சி.பி.ஜ. நீதிபதி, வினோத் குமார் உத்தரவிட்டார்.

தண்டனையின் மீதான விவாதம் வரும் 17, 19 மற்றும் 21 தேதிகளில் நடைபெறும் என்றும் 22ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பையொட்டி 55 பேரும் இன்று கைது செய்யப்பட்டனர். முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment